வத்திக்குச்சி ‍- சினிமா விமர்சனம்நேற்று வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு. ஒன்று பாலாவின் பரதேசி, இன்னொன்று வத்திக்குச்சி.  பரதேசி பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் "அவன் இவன்" கொடுத்த அடியின் வலியே இன்னும் மறக்காத நிலையில் வத்திக்குச்சி போவதென தீர்மானிக்கப்பட்டது.  ஏ ஆர் முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இரண்டாவது படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.  ஆனால் படம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.படத்தின் நாயகனான திலீபன் சொந்தமாக ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார்.  பல்லாவரம் பகுதியிலிருந்து தாம்பரத்துக்கும் வேளச்சேரிக்கும் செல்லும்  அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கிறார்.  ஒரு நாள் இவர் ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியேறும்போது சம்பத் தலைமையிலான சிலர் கத்தி முனையில் பத்தாயிரம் ரூபாயை பறித்துவிடுகின்றனர்.  அவர்களைக் கண்காணித்து,  அவர்களுடைய இடத்துக்கே சென்று அடித்துத் துவைத்து பறிகொடுத்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறார். போதாததற்கு சம்பத்தையும் நையப் புடைத்துவிடுகிறார்.  இந்த விஷயம் தெரிந்தவுடன் சம்பத்தை வைத்து காரியம் சாதிக்கும் முதலாளிகளும் சம்பத்தின் நண்பர்களும் அவரை விட்டு விலகிவிடுகிறார்கள்.  வேலை இல்லாததால் ஏழையாகும் சம்பத் திலீபனைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார்.
ரோட்டில் யாரோ யாரையோ கொல்வதைப்பற்றி போனில் பேசுவதைக் கேட்கும் ஹீரோ திட்டமிட்டு செய்யப்படப்போகும் கொலையை திட்டமிட்டு சமயோசிதமாக செயல்பட்டு சண்டைபோட்டு  தடுக்கிறார்.  இதனால் பெரும் நஷ்டம் அடையும் நகை வியாபாரியான ஜெயப்பிரகாஷ் ஹீரோவைக் கொல்லத்துடிக்கிறார்.
ஒரு பெரிய பணக்காரரின் மகனைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன் தலைமையிலான கும்பலுக்கு ஹீரோ முட்டுக்கட்டையாக இருக்க ஹீரோவைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார் ஜெகன். 
ஆக மொத்தத்தில் ஹீரோவை மூன்று கும்பல் கொல்லத் துடிக்கின்றன.  அந்த மூன்று கும்பல் அவரை எப்படிக் கொல்லத் திட்டமிடுகிறார்கள், அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தாரா என்பதுதான் வத்திக்குச்சி படத்தின் கதை.
இன்ஃப்ளுயன்ஸ் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் என்பதற்கு இணங்க‌ தன் தம்பியையே நடிக்கவைத்து படம் தயாரித்திருக்கிறார் ஏஆர் முருகதாஸ்.  திலீப‌ன் ந‌ம்ம‌ ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் போல‌ இருக்கிறார்.  ஆனால் ஹீரோ ரோலுக்குப் பொருத்த‌மான‌ முக‌ அமைப்பு இல்லை.  இய‌க்குந‌ர்க‌ளே, த‌ய‌வு செய்து ப‌ட‌த்தின் க‌தைக்கேற்ற‌ ஹீரோவைத் தேர்வு செய்யுங்க‌ள்.  திலீப‌ன் இனி அண்ண‌ன், த‌ம்பி, அடியாள், அமெரிக்க‌ மாப்பிள்ளை போன்ற‌ கேர‌க்ட‌ர்க‌ளில் ந‌டிக்க‌லாம்.

 


ஹீரோயினாக‌ அஞ்ச‌லி.  குண்டாக‌ உய‌ர‌மான‌ ஒரு பெரிய‌ மாமிச‌ ம‌லை போல் இருக்கிறார்.  அவரது குரல் வேறு இரண்டு சில்வர் பாத்திரங்களை வைத்து தேய்த்ததுபோல் கீச் கீச் என்று இருக்கிறது.  அவர் வசனம் பேசும்போது நமக்கு முடி சிலிர்த்துக்கொள்கிறது.  இனியாவது படங்களில் சொந்தக்குரலில் பேசாமல் இருக்கவேண்டும்.  ஒரு அட்வைஸ், இப்ப‌டியே போனால் மொத்த‌த் த‌மிழ‌க‌மும் தங்களைப் புற‌க்க‌ணிக்க‌ நேரிடும்.  திருத்திக்கோங்க‌ அம்ம‌ணி...

 

படம் முழுவதும் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்தல், துரத்தல், சண்டை என்றே செல்கிறது.  படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை பரபரப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காக இயக்குநர் கின்ஸ்லின் ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது.  ராஜசேகரின் சண்டைக்காட்சிகள் பிரமாதமான இருக்கின்றன.  முக்கியமாக வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸில் பரங்கிமலையில் நடக்கும் சண்டையும் அதிர வைக்கின்றன.  துரத்தல் காட்சிகளில் ஜெகன் கும்பல் ஹீரோவை வீட்டில் பூட்டிவைத்துவிட்டுக் காத்திருக்கும் காட்சிகள் திக் திக்.

நிறைய லாஜிக் ஓட்டைகள்.  உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று.  ஹீரோவை சம்பத் கோஷ்டி கொலை செய்வதற்காக பைக்கில் கூட்டிச்செல்கிறார்கள்.  போகும் வழியில் போக்குவரத்துப் போலிஸ் மடக்குகிறார்கள். ஹீரோ அங்கேயே போலீசிடம் சொல்லித் தப்பித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடிப்போய் சாப்பிட்டுவிட்டு எக்சர்சைஸ் செய்து சண்டைக்குத் தயாராகிறார்.  கடவுளே!


நல்ல தீம்.  ஒரு அருமையான ஆக்சன் கதையாக வந்திருக்க வேண்டிய படம் தெளிவற்ற திரைக்கதையால் சொதப்பப்பட்டிருக்கிறது.வத்திக்குச்சி - பத்திக்கவில்லை.