உங்களுக்கு போன் செய்தது யார்?

உங்களுக்கு போன் செய்தது யார்?


முன்பெல்லாம் நம் வீட்டில் லேண்ட்லைன் மட்டும்தான் இருந்தது
. ஒருவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் அந்தப் புத்தகத்தில் தேடுவோம். ஆனால் இப்போது லேண்ட்லைன் என்பது வழக்கொழிந்து வருகிறது. அனைவரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். சிலர் இரண்டு மூன்று எண்கள் வரை வைத்திருக்கிறார்கள். அனானிமஸ் மற்றும் மிரட்டல் விடுக்கும் நபர்கள், தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டு அது பெண்ணாக இருந்தால் கடலை போடும் நபர்கள் அதிகரித்துவிட்டார்கள். ஏன் நாமே சிலருக்கு நமது செல்போன் எண்ணைக் கொடுத்திருப்போம் ஆனால் நமது போனில் அவர்களுடைய எண்களை பதிவேற்றியிருக்க மாட்டோம். திடீரென்று நமக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது யாரென்று யோசிப்போம். போனை எடுத்து பேசியபிறகு "அட, இவர்தானா" என்று நினைப்போம். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. உங்கள் செல்போன் அழைக்கும்போதே அது யாருடையதென்று நொடிகளில் தெரிவிக்கும் ஆண்டிராய்ட் அப்ளிகேஷன் இருக்கிறது. அதுதான் "Truecaller - Global Directory".
உலகத்திலுள்ள தொலைபேசி எண்களில் சுமார் 80 சதவீதம் வரை இவர்களுடைய டைரக்டரியில் இருக்கிறது.  அது எப்படி என்று இவர்களுடைய தளத்தில் சென்று விசாரித்தால் பல விதமான டைரக்டரிகளில் இருந்து எண்களை சேகரித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். மேலும் ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் போன் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இவர்களுடைய டேட்டாபேஸில் தங்களுடைய போனில் இருக்கும் contact விபரங்களை அப்லோட் செய்கிறார்கள்.

எப்படி வேலை செய்கிறது?  இந்த அப்ளிக்கேஷனை உங்களுடைய போனில் நிறுவிவிட்டால் போதும்.  ஏதாவது ஒரு எண்ணிலிருந்து போன் வரும்போது அந்த எண் உங்களது கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லையென்றால் தானாகவே தேடத்துவங்குகிறது.  ஒரு சில நொடிகளில் யாரிடமிருந்து அழைப்பு வந்தது என்பதையும் சிறு விண்டோவில் காட்டிவிடுகிறது.  இவர்களுடைய டேட்டாபேஸில் அந்த எண் இல்லாதபட்சத்தில் "No Matches Found" என்று காட்டிவிடுகிறது.இந்த அப்ளிகேஷன் மூலம் ஒரு அருமையான வசதி உண்டு.  தேவையற்ற அழைப்புகளை நாம் block செய்துவிடலாம்.  இதன்மூலம் நமக்கு வரும் வங்கி இன்சூரன்ஸ் மற்றும் பிற தேவையற்ற அழைப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.  நமக்கு எந்த எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த எண்ணை blacklist என்ற இடத்தில் உள்ளீடு செய்தால் போதும்.  அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்பு தடுக்கப்படும். அதற்கும் இவர்கள் ஒரு பெரிய டேட்டாபேஸ் வைத்திருக்கிறார்கள்.  நம்மைப்போல் பயனாளர்கள் உள்ளீடு செய்த எண்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது.
இன்னுமோர் சிறப்பான விஷயம் என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் எந்த எண்ணுடைய கான்டாக்ட் பெயரை வேண்டுமானாலும் நாம் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.  அந்த எண் இவர்களுடைய டேட்டாபேசில் இருந்தால் போதும். உங்களுக்கு அந்த நபரின் பெயரைக் காட்டிவிடும்.


 
இந்த அப்ளிக்கேஷனைப் பெற என்ன தேவை?ஆண்டிராய்ட் அல்லது விண்டோஸ் வசதியுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்பு.  இன்டர்நெட் எப்போதும் ஆன்லைனில் இருக்க வேண்டும்.  அப்போது தான் அழைப்பு வந்தவுடன் இந்த அப்ளிகேஷன் தனது செர்வரில் உள்ள தகவல்களைத் தேடுவதற்கு எளிதாக இருக்கும்.மேலும் தகவல்களுக்கு  www.truecaller.com  என்ற முகவரியில் காணவும்..

நன்றி...

 

ஹோட்டல் - ZAATAR

ஹோட்டல் - ZAATARசென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டு கவனிப்பாரின்றி இருக்கும் சில ஹோட்டல்களில் முக்கியமானது இது.  இவர்கள் தரும் சுவை மற்றும் வெரைட்டியான உணவு வகைகள்.  இந்த ஹோட்டலுக்குச் சென்று நான் குடும்பத்துடன் சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.


சிக்கன் லாலிபாப்புடன்


கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.  நம்ம வீட்டு ஸ்கூல் பையன் சிக்கன் லாலிபாப் சாப்பிடவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடித்ததால் சரி இருக்கவே இருக்கிறது வீட்டுக்குப் பக்கத்திலேயே என்று கிளம்பிவிட்டோம்.  ஹோட்டல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் யெல்லோ பேஜஸ் எதிரே உள்ள வி.எம். தெருவில் திரும்பியவுடன் இடதுபுறத்தில் இருக்கிறது.  இந்த அமைப்பு தான் இந்த ஹோட்டலுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் என்றே கூறலாம்.  காரணம் மெயின் ரோட்டில் இல்லாத காரணம் மற்றும் அந்த இடத்தில் ஹோட்டல் இருப்பதற்கான அறிகுறியே இல்லாதது.  இருந்தாலும் தற்போது மவுத்டாக் மூலம் ஓரளவு கூட்டம் சேர்ந்துவருகிறது.
நம்ம ஸ்கூல் பையனுக்கு ஆர்டர் செய்தது சிக்கன் லாலிபாப், மற்றும் ஒரு சிக்கன் நூடுல்ஸ்.  எனக்கு ப்ரான் பிரைட் ரைஸ் கேட்டேன், ப்ரான் பிரைட் ரைசை விட ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ் மிகவும் ஸ்பைசியாக இருக்கும் என்று சர்வர் சொல்ல அதையே எடுத்துக்கொள்ளச் சொன்னேன்.  வீட்டம்மா வழக்கம்போல குல்ச்சாவும் பனீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் செய்தார்கள்.சிக்கன் லாலிபாப்


முதலில் வந்தது சிக்கன் லாலிபாப்.  எலும்பின் ஒரு பகுதியில் மட்டும் சதை இருப்பதுபோல வெட்டி மசாலா சேர்த்து பொரித்திருந்தார்கள்.  மறுபகுதியில் கையில் எண்ணெய் படாமல் இருக்க பேப்பர் சுற்றியிருந்தார்கள்.  தொட்டுக்கொள்ள சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ்.  மிகவும் மொறுமொறுவென்று இருந்தது.ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ்


அடுத்ததாக ப்ரான் செஸ்வான் பிரைட் ரைஸ்.  மிகவும் அருமை.  சாதாரண பிரைட் ரைஸ் சாப்பிட்டிருந்தால் கூட இந்த அளவுக்கு உணர்ந்திருக்க மாட்டேன்.  சும்மா நாக்கில் பட்டதும் சுளீர் என்றிருந்தது. சர்வரின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி சொல்லிக்கொண்டேன்.  தொட்டுக்கொள்ள சிக்கன் மசாலா மற்றும் ஆனியன் ரைத்தா கொடுத்தார்கள்.  மசாலா மற்றும் ரைத்தா வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் கொடுக்கிறார்கள்.சிக்கன் நூடுல்ஸ்

சிக்கன் நூடுல்ஸ்.  சிக்கனை நன்றாக வேகவைத்து நூடுல்ஸ் சமைக்கும்போது கலந்து சமைத்திருந்தார்கள்.  கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது.  இருந்தாலும் சுவையில் குறைவில்லை.

குல்ச்சாவுடன் பனீர் பட்டர் மசாலா

இறுதியாக பையனுக்கும் வீட்டம்மாவுக்கும் ஆளுக்கொரு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கும் ஆர்டர் செய்தோம்.  ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் என்பது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமில் பாலைக் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றித் தந்தது போல் இருந்தது.  சுவையோ பிரமாதம்.  இவையனைத்தையும் சாப்பிட்டு முடிப்பதற்குள் வயிறு நிறைந்திருந்தது.


இவ்வளவு சாப்பிட்டும் மொத்த பில் ரூபாய் 852 மட்டுமே (!).  கொஞ்சம் அதிகம் என்றாலும் தரத்துக்காகவும் சுவைக்காகவும் தாராளமாகக் கொடுக்கலாம்.  இங்குள்ளவர்களின் உபசரிப்பும் அருமை.  ஆர்டர் எடுப்பதிலும் சரி, பரிமாறுவதிலும் சரி, மற்ற ஹோட்டல்களைப் போல ஏனோ தானோவென்று செய்யாமல் கொஞ்சம் டெடிகேட்டடாகச் செய்வது சிறப்பு.
மொத்தத்தில் ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் அந்தப்பக்கம் போனால் இந்த ஹோட்டலை விசிட் அடித்துவிட்டே வருவார்கள் என்பது உறுதி.


இந்த ஹோட்டலின் மற்றுமொரு சிறப்பு கிரில் சிக்கன்.  ஹோட்டலுக்கு வெளியே எண்ணெய் வடிய சுற்றிக்கொண்டு வருவோர் போவோரை சுண்டி இழுக்கும் ஒரு காட்சி.  இங்கே நான் சென்று சாப்பிட்டதை விட பார்சல் வாங்கி சாப்பிட்டதே அதிகம்.  இவ்வாறு நான் பார்சல் வாங்கி சாப்பிட்ட ஐட்டங்கள் சில உங்கள் பார்வைக்காக.  அசைவம் பிடிக்காதவர்கள் மன்னிக்க.கிரில் சிக்கன்

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரைட் ரைஸ்

சிக்கன் 65

சில்லி சிக்கன்சிக்கன் ஸ்பிரிங் ரோல்

கிரில் சிக்கன்தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள்


தொட்டுக்கொள்ளும் ஐட்டங்கள்
கருத்துரையிட்டு ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே....நன்றி...

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்

திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்நண்பர்களுடன் சேர்ந்து அதுவும் ப்ளாக்கர் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதென்பது ஒரு உன்னதமான அனுபவம்.  அதுவும் இதுபோன்ற புரட்சிகரமான காவியப் படங்களை விசிலடித்து, கத்தி ஆர்ப்பரித்துப் பார்ப்பதில் அலாதி ஆனந்தம்.  இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவே சென்ற வாரம் சீனு என்னை சனிக்கிழமை மதியக் காட்சிக்கு போகலாம் என்று அழைத்தவுடன் கொஞ்சம் கூடத் தயங்காமல் சம்மதித்தேன்.  அதன்படி நேற்று மதியம் நானும் சீனுவும் மதியம் 2.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ஆஜர்.  எங்களுக்கு முன்பாகவே மெட்ராஸ்பவன் சிவகுமாரும் மின்னல் வரிகள் பாலகணேஷும் வந்து காத்திருந்தார்கள்.  சிறிது நேரத்தில் அஞ்சா சிங்கமும் அரசனும் வர அரங்கினுள் நுழைந்தோம்.நீண்ட காலம் கழித்து ராஜகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்பதாலும் தானே கதாநாயகன் என்பதாலும் இது அவரது மனைவி தேவயானியின் 75ஆவது படம் என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.  மேலும் டிரைலர்கள் மற்றும் பேஸ்புக்கில் பார்த்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அறிவித்திருந்தது.  சாம்பிளுக்கு இணையத்தில் வந்த படங்களை கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.இனி படத்தைப் பற்றி....தொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் கதாநாயகனாகி ரிட்டயர் ஆகிவிட கடைசியாகக் களமிறங்கியிருக்கும் நம்ம அண்ணன் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் அவர்களின் தைரியத்தை மனம் திறந்து  பாராட்டியே ஆக வேண்டும்.  விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தையே தன் காதல் கடிதமாக உபயோகித்து தேவயானியின் ராஜகுமாரனாக ஆனவர் இந்தப்படத்தின் மூலம் தேவதாஸ் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கதையைப் பற்றிச் சொன்னால் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதாலும் தியேட்டருக்கு வரும் பத்து பேரும் வராமல் போய்விடும் அபாயம் இருப்பதாலும் மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். படம் தொடங்கியதும் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்குகிறார்.  ஒன்று, இரண்டு, மூன்று என அவர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு பதைபதைக்கிறது.  நான்காவது அடிக்குள் அவர் எழுந்து போலீசாரைப் பந்தாடும்போது தியேட்டரிலிருந்த பத்துபேரில் எட்டுபேர் விசிலடிக்கிறார்கள்.  பின்னர் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி கடலில் வீசி எறிகிறார்கள்.  இப்படி ஆரம்பமே அதகளப்படும்போது நம்மால் இருக்கை நுனியை விட்டு நகர முடியவில்லை.கதாநாயகன் ராஜகுமாரன் இரண்டு இன்ச்சுக்கு மேக்கப் போட்டிருக்கிறார், அதிலும் அவர் உபயோகித்திருக்கும் லிப்ஸ்டிக் கருஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.  படம் முழுவதும் நீலநிற முண்டா பனியன் மேல் திறந்துவிடப்பட்ட சட்டையும் நீல நிற பேண்ட்டுமாக அலைகிறார்.  சாக்கடையில் நனைந்து கருப்பு நிற சாயத்தில் மிகவும் அழகாக இருக்கிறார்.  பாடல் காட்சிகளில் பல ரூபங்களில் தோன்றி நம்மை பயமுறுத்துகிறார்.  அதிலும் அவர் வசனம் பேசும் காட்சிகள்... ஆஹாஹா.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் உரைநடை வாசிப்பதுபோல் வாசிக்கிறார்.  அதிலும் புருஷன், வருஷம், விஷயம் என்பதை புருசன், வருசம், விசயம் என்று உச்சரிக்கிறார்.  ஏண்ணே, உங்களுக்கு "ஷ" வே வராதா?


நாயகியாக தேவயானி மற்றும் கீர்த்தி சாவ்லா.  தேவயானி ஸ்கூல் படிக்கும் பெண்ணாம்.  முகத்தில் சுருக்கங்களை மறைக்க முடியவில்லை, பாவாடை சட்டை போட்டு வலம் வருகிறார், சிரிக்கும்போது தன் முயல் பற்களைக் காட்டி பயமுறுத்துகிறார்.  மாமா மாமா என்று நாயகனிடம் உருகி வழிகிறார்.  வக்கீலாக இன்னொரு வேடத்திலும் நடித்து தன் பங்குக்கு கடமையாற்றியிருக்கிறார்.  அதிலும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கத்திலுள்ள பத்துபேரும் கைதட்டுகிறார்கள்.  இன்னொரு நாயகியாக கீர்த்தி சாவ்லா, நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தில்(!) அவர் கவனிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், மதன்பாப், பாத்திமா பாபு, ரமேஷ் கண்ணா, பப்லு, சிங்கமுத்து, மனோகர், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  ஆனால் தேவயானி ராஜகுமாரன் தம்பதியின் ஆளுமையால் யாருடைய நடிப்பையும் ரசிக்க முடியவில்லை.  இசை எஸ் ஏ ராஜ்குமர்.  பாடல்கள் கேட்பதற்கு நன்று, ஆனால் படமாக்கப்பட்ட விதம் பாடல்களை ரசிக்கவைக்கவில்லை.  பின்னணி இசையில் லலலா....லாலா மிஸ்சிங்.

படு அபத்தமான கதை, அதைவிட அபத்தமான திரைக்கதை, மோசமான காஸ்டிங், இசை, திடீர் திடீரென வரும் பாடல்கள், சாதாரண கேரக்டர் கூட முழ நீளத்துக்கு வசனம் பேசுவது என்று நம்மைக் கிறங்கடிக்கிறார்கள்.  இதில் ஒரு புதுமையான கருத்தை வேறு சொல்லியிருக்கிறார்கள்.  மணமக்களின் தாய் தந்தை தவிர்த்து திருமண மண்டப ஓனர், பாத்திரக்காரர், சமையல்காரர், ஐயர், கக்கூஸ் கழுவுபவர் வரை மணப்பெண்ணுக்கு சம்மதமா என்று விசாரித்த பின்னரே தங்களது பணிக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று. கொடுமைடா சாமி....

மொத்தத்தில் தூக்கு போட்டோ, விஷம் சாப்பிட்டோ, உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தோ அல்லது வேறு வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்கள் மாற்று வழியாக இந்தப்படத்தைப் பார்த்து முயற்சிக்கலாம்.திருமதி தமிழ் விமர்சனம் படிக்க‌