திருமதி தமிழ் - சினிமா விமர்சனம்நண்பர்களுடன் சேர்ந்து அதுவும் ப்ளாக்கர் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதென்பது ஒரு உன்னதமான அனுபவம்.  அதுவும் இதுபோன்ற புரட்சிகரமான காவியப் படங்களை விசிலடித்து, கத்தி ஆர்ப்பரித்துப் பார்ப்பதில் அலாதி ஆனந்தம்.  இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகவே சென்ற வாரம் சீனு என்னை சனிக்கிழமை மதியக் காட்சிக்கு போகலாம் என்று அழைத்தவுடன் கொஞ்சம் கூடத் தயங்காமல் சம்மதித்தேன்.  அதன்படி நேற்று மதியம் நானும் சீனுவும் மதியம் 2.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் ஆஜர்.  எங்களுக்கு முன்பாகவே மெட்ராஸ்பவன் சிவகுமாரும் மின்னல் வரிகள் பாலகணேஷும் வந்து காத்திருந்தார்கள்.  சிறிது நேரத்தில் அஞ்சா சிங்கமும் அரசனும் வர அரங்கினுள் நுழைந்தோம்.நீண்ட காலம் கழித்து ராஜகுமாரன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்பதாலும் தானே கதாநாயகன் என்பதாலும் இது அவரது மனைவி தேவயானியின் 75ஆவது படம் என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.  மேலும் டிரைலர்கள் மற்றும் பேஸ்புக்கில் பார்த்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அறிவித்திருந்தது.  சாம்பிளுக்கு இணையத்தில் வந்த படங்களை கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.இனி படத்தைப் பற்றி....தொண்ணூறுகளில் இயக்குநர் அவதாரம் எடுத்த தொண்ணூறு பேரில் எண்பத்தொன்பது பேர் கதாநாயகனாகி ரிட்டயர் ஆகிவிட கடைசியாகக் களமிறங்கியிருக்கும் நம்ம அண்ணன் சோலார் ஸ்டார் ராஜகுமாரன் அவர்களின் தைரியத்தை மனம் திறந்து  பாராட்டியே ஆக வேண்டும்.  விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தையே தன் காதல் கடிதமாக உபயோகித்து தேவயானியின் ராஜகுமாரனாக ஆனவர் இந்தப்படத்தின் மூலம் தேவதாஸ் ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கதையைப் பற்றிச் சொன்னால் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் என்பதாலும் தியேட்டருக்கு வரும் பத்து பேரும் வராமல் போய்விடும் அபாயம் இருப்பதாலும் மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். படம் தொடங்கியதும் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்குகிறார்.  ஒன்று, இரண்டு, மூன்று என அவர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு பதைபதைக்கிறது.  நான்காவது அடிக்குள் அவர் எழுந்து போலீசாரைப் பந்தாடும்போது தியேட்டரிலிருந்த பத்துபேரில் எட்டுபேர் விசிலடிக்கிறார்கள்.  பின்னர் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி கடலில் வீசி எறிகிறார்கள்.  இப்படி ஆரம்பமே அதகளப்படும்போது நம்மால் இருக்கை நுனியை விட்டு நகர முடியவில்லை.கதாநாயகன் ராஜகுமாரன் இரண்டு இன்ச்சுக்கு மேக்கப் போட்டிருக்கிறார், அதிலும் அவர் உபயோகித்திருக்கும் லிப்ஸ்டிக் கருஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.  படம் முழுவதும் நீலநிற முண்டா பனியன் மேல் திறந்துவிடப்பட்ட சட்டையும் நீல நிற பேண்ட்டுமாக அலைகிறார்.  சாக்கடையில் நனைந்து கருப்பு நிற சாயத்தில் மிகவும் அழகாக இருக்கிறார்.  பாடல் காட்சிகளில் பல ரூபங்களில் தோன்றி நம்மை பயமுறுத்துகிறார்.  அதிலும் அவர் வசனம் பேசும் காட்சிகள்... ஆஹாஹா.. எந்த உணர்ச்சியும் இல்லாமல் உரைநடை வாசிப்பதுபோல் வாசிக்கிறார்.  அதிலும் புருஷன், வருஷம், விஷயம் என்பதை புருசன், வருசம், விசயம் என்று உச்சரிக்கிறார்.  ஏண்ணே, உங்களுக்கு "ஷ" வே வராதா?


நாயகியாக தேவயானி மற்றும் கீர்த்தி சாவ்லா.  தேவயானி ஸ்கூல் படிக்கும் பெண்ணாம்.  முகத்தில் சுருக்கங்களை மறைக்க முடியவில்லை, பாவாடை சட்டை போட்டு வலம் வருகிறார், சிரிக்கும்போது தன் முயல் பற்களைக் காட்டி பயமுறுத்துகிறார்.  மாமா மாமா என்று நாயகனிடம் உருகி வழிகிறார்.  வக்கீலாக இன்னொரு வேடத்திலும் நடித்து தன் பங்குக்கு கடமையாற்றியிருக்கிறார்.  அதிலும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கத்திலுள்ள பத்துபேரும் கைதட்டுகிறார்கள்.  இன்னொரு நாயகியாக கீர்த்தி சாவ்லா, நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தில்(!) அவர் கவனிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், மதன்பாப், பாத்திமா பாபு, ரமேஷ் கண்ணா, பப்லு, சிங்கமுத்து, மனோகர், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  ஆனால் தேவயானி ராஜகுமாரன் தம்பதியின் ஆளுமையால் யாருடைய நடிப்பையும் ரசிக்க முடியவில்லை.  இசை எஸ் ஏ ராஜ்குமர்.  பாடல்கள் கேட்பதற்கு நன்று, ஆனால் படமாக்கப்பட்ட விதம் பாடல்களை ரசிக்கவைக்கவில்லை.  பின்னணி இசையில் லலலா....லாலா மிஸ்சிங்.

படு அபத்தமான கதை, அதைவிட அபத்தமான திரைக்கதை, மோசமான காஸ்டிங், இசை, திடீர் திடீரென வரும் பாடல்கள், சாதாரண கேரக்டர் கூட முழ நீளத்துக்கு வசனம் பேசுவது என்று நம்மைக் கிறங்கடிக்கிறார்கள்.  இதில் ஒரு புதுமையான கருத்தை வேறு சொல்லியிருக்கிறார்கள்.  மணமக்களின் தாய் தந்தை தவிர்த்து திருமண மண்டப ஓனர், பாத்திரக்காரர், சமையல்காரர், ஐயர், கக்கூஸ் கழுவுபவர் வரை மணப்பெண்ணுக்கு சம்மதமா என்று விசாரித்த பின்னரே தங்களது பணிக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று. கொடுமைடா சாமி....

மொத்தத்தில் தூக்கு போட்டோ, விஷம் சாப்பிட்டோ, உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்தோ அல்லது வேறு வழிகளில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பவர்கள் மாற்று வழியாக இந்தப்படத்தைப் பார்த்து முயற்சிக்கலாம்.திருமதி தமிழ் விமர்சனம் படிக்க‌