இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
இனி

திரும்பி ஓட்டமெடுத்தேன்.  அவன் அரிவாளை என்மீது வீசினான்.  என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது.  "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை.  சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது.  அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான்.  நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது.  ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன்.  நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.அடுத்த இடதுபுறத்தில் திரும்பினேன், ஓ, அது ஒரு முட்டு சந்து.  இடம் வலம் என எங்கேயும் திருப்பங்கள் இல்லை.  அரைகுறையாக கட்டப்பட்ட ஒன்றிரண்டு கட்டிடங்கள் மட்டுமே.  அவ்வளவுதான், நான் மாட்டிக்கொண்டேன்.  இவனது அரிவாளுக்கு இரையாகப் போகிறேன். ஓடினேன், இன்னும் முடிக்கப்படாத அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தேன். தோள்பையை இறக்கிவைத்தேன்.


"யார்ரா நீ?"


அவன் இன்னும் எதையோ மென்று கொண்டிருந்தான்.  அரிவாளை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். ஆ, ஓடும்போது தெரியாத வலி இப்போது என் பின்னங்கழுத்தில் தெரிந்தது.  ரத்தம் என் உள்ளாடையை நனைத்து கால்சட்டையில் பரவ ஆரம்பித்திருந்தது.


"துப்" என்ற சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்த நொடி என் முகமெங்கும் கீறல். ஆம், அவன் இவ்வளவு நேரமாய் மென்று கொண்டிருந்த பிளேடு துகள்களை என் முகத்தில் துப்பியிருந்தான்.  வலித்தது, நல்லவேளையாக என் கண்களில் குத்தியிருக்கவில்லை.  அவனைப் பார்த்துக்கொண்டே கன்னத்திலும் நெற்றியிலும் குத்தியிருந்த துகள்களைப் பிய்க்க ஆரம்பித்தேன்.  அரிவாளைத் தூக்கியபடியே அவன் என்னை நோக்கி ஓடி வந்தான்.  விலகினேன், திரும்பினான், சற்றும் தாமதிக்காமல் அவன் வாயில் ஒரு குத்துவிட்டேன்.


"ஆஆஆஆஆஆ", என் கை வலித்தது. தோல் கிழிந்து சதை தொங்கியது. அவனைப் பார்த்தேன், குனிந்து வாயிலிருந்த ரத்தத்தை துப்பிக்கொண்டிருந்தான்.  நான்கு பற்களாவது உடைந்திருக்கும்.  இப்போது எனக்கு தைரியம் வந்தது.  ஓடிச்சென்று அவன் பின்னால்  ஒரு உதைவிட்டேன்.  தடுமாறி விழுந்தான்.  அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி விலகியது.  அடுத்த நொடி அது என் கையில்.  இதைக் காட்டியே அவனிடமிருந்து தப்ப வேண்டும்.


திரும்பினேன். என் வலுவான வலது புஜத்தில் கூரான கத்தி ஒன்று பாய்ந்தது.  குத்திவிட்டான்.  இழுத்தான், வரவில்லை.  பலங்கொண்டமட்டும் இழுத்தான்.  ரத்தம் சீறிப்பாய்ந்து அவன் முகத்தை நனைத்தது.  அடுத்து அவன் என் நெஞ்சில் குத்தி என் இதயத்தை பொத்தலாக்கலாம். அல்லது வயிற்றில் குத்தி என் குடலைத் துண்டு துண்டாக்கலாம்.  அவன் செயல்படும் முன்னர் நான் முந்தியாக வேண்டும்.


அரிவாளைப் பிடித்திருந்த என் வலது கையைத் தூக்க முடியவில்லை.  சட்டென இடது கைக்கு மாற்றி அவன் மீது வீசி எறிந்தேன்.  அது சரியாக அவனது குரல்வளையைக் கிழித்துக்கொண்டு விழுந்தது.  "ஹக்" அவனால் மூச்சு விடமுடியவில்லை.  குரல்வளையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.  இரண்டடி நடந்தான், பின் சுருண்டு விழுந்தான், ஒரு நிமிடம் துடித்தான், அடங்கிப்போனான்.


தொடரும்....