வணக்கம் நண்பர்களே,

கடந்த செப்.1 ஆம் தேதி பதிவர் திருவிழாவில் மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தை வெளியிட்டு சேட்டைக்காரன் அவர்கள் பேசியதைத் தந்துள்ளேன்.


அவையோர்களே, பெரியோர்களே, சக பதிவர்களே, நண்பர்களே, விஸ்வரூபங்களாக அவையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இந்த கொசுவரூபனின் வணக்கம்.  போன வருஷம் சகோதரி சசிகலாவின் தென்றலின் கனவு என்ற புத்தகம் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் வெளியிடப்பட்டு, அதன் முதல் பிரதியை நான் வாங்கினேன்.  இந்த வருஷம் என்னுடைய புத்தகம் உட்பட நான்கு புத்தகங்கள் என்று அறிவித்து இப்போது ஐந்தாக வெளியிடப்பட இருக்கின்றது.  அதாவது ஒரே வருடத்தில்  ஐந்து வருடத்து வளர்ச்சி ஐந்து வருட வெற்றி இந்தப் பதிவர் திருவிழாவுக்கு கிடைத்திருக்கிறது.இந்த வலை உலகம் என்பது மிகப்பெரிய சர்க்கஸ்.  இதில் ஒருவர் சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுக்கிறார், ஒருவர் அந்தரத்தில் பல்டி அடிக்கிறார், ஒருவர் நெருப்புக்குள் தாவுகிறார், அவர்களுக்கு அதை செய்யக்கூடிய திறமை இருக்கிறது, வலிமை இருக்கிறது.  நான் என்ன பண்றது?  நான் பரங்கிமலையில் பல்லியைக் கண்டால் பல்லாவரம் வரை ஓடுவேன்.  என்னுடைய தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டேன் அது என்னவென்றால் கோமாளி வேலை.  அந்தக் கோமாளி செய்வதைத்தான் நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.  அதனுடைய விளைவுதான் இந்த மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகம்.

இது எப்படியென்றால், இடம் பொருள் ஏவல் என்று சொல்வார்கள்.  இந்தப் புத்தகத்துக்கும் இடம் பொருள் ஏவல் எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது.  முதலில் இந்த வெளியீடு நடக்கும் இடம் திரை இசைக் கலைஞர்கள் சங்கம், ஒரு ஆறு வருடத்துக்கு முன் ஒரு திரைப்படப் பாடலின் வரிகளை மாற்றி எழுத ஆரம்பித்து தான் இணையத்துக்கு அறிமுகமானேன். இன்று இதே வளாகத்தில் என்னுடைய புத்தகம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இரண்டாவதாக கலைவாணர் NS.கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாகர்கோவில் தான் என்னுடைய சொந்த ஊர். நான் பிறந்தது வளர்ந்தது படித்தது, படித்தது என்று சொல்ல முடியாது, காலேஜுக்கு போனது எல்லாம் அங்கே தான்.  அதே கலைவாணர் பெயர் சூட்டப்பட்ட NSK சாலையில் இந்தப் புத்தகம் வெளியாகிறது.  அது மிகவும் மகிழ்ச்சி.

மூன்றாவதாக, இதே வடபழனி முருகன் கோவிலில் தான் இரண்டு மாதங்களுக்கு முன் நான் மொட்டையடித்தேன். இன்று அதே வடபழனியில் மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகம் வெளியாகிறது.

எந்த ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டாலும் நாம் கணேசனை நினைத்துவிட்டுத்தான் தொடங்குகிறோம்.  அந்த விதத்தில் நான் நினைத்தது மின்னல் வரிகள் பாலகணேஷ்-ஐத் தான்.  அவர் பாலகணேஷ் அல்ல பலே கணேஷ். என்னைப் பொறுத்தவரையில் அவர் இணைய உலகத்தின் இளைய தளபதி.  எப்படியென்றால் அவர் எல்லோரையும் அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பார்.  இந்தப் புத்தகத்தை வடிவமைப்பதற்கு அவர் பட்ட கஷ்டம், ஓவியத்தை சீர் செய்ய அவரது மெனக்கெடல்கள், அமெரிக்காவில் இருப்பவரிடமிருந்து அணிந்துரை வாங்குவதற்காக அவர் தேடிக்கொண்ட சிரமங்கள் என்று பட்டியலிட்டால் அது நம்ம வீடு வசந்தபவன் மெனு கார்டை விட நீளமாகப் போகும்.  அதனால் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அவருக்கு நன்றி என்று மட்டும்தான் சொல்லமுடியும்.  அந்த நன்றி இன்றோடு முடிவதில்லை, இன்னும் என் ஆயுள் உள்ளவரை தொடரும்.  அவர் என்னை அண்ணான்னு கூப்பிட்டார், தம்பிக்கு நன்றி சொல்வது மரபல்ல, எனவே சம்பிரதாயத்துக்காக நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

நன்றி-திரு.பாலகணேஷ்


அடுத்ததாக எழுத்தாளர் கடுகு.  அவர் அமெரிக்காவில் இருந்து அணிந்துரை எழுதியிருக்கிறார், இந்தப் புத்தகத்துக்கான அணிந்துரை imported from அமேரிக்கா.  அந்த விஷயத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.  அடுத்ததாக வாழ்க்கை வாழ்வதற்கே என்று நேர்மறையான சிந்தனைகொண்ட  வலைப்பூ பெயரைக் கொண்ட நண்பர் திரு.பிரபாகர் அவர்கள். அவர் இல்லையென்றால் சேட்டைக்காரன் வந்திருக்கவே முடியாது. அவர் தான் எனக்கு எப்படி எழுதவேண்டும், ஏன் எழுதவேண்டும், எதை எழுதவேண்டும் எதை எழுதக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தவர்.  அவர் இங்கு வந்து இந்தப் புத்தகம்  வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  அடுத்ததாக அனன்யா மகாதேவன் அவர்கள் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் எழுதுவார்கள்.  எனது பதிவுகளில் சில வரிகளை சுட்டிக்காட்டி இந்த மாதிரி எழுதாதீர்கள், பெண்களுக்கு பிடிக்காது, இதை மாற்றுங்கள் என அறிவுரைகள் வழங்கினார்கள்.  இவர் முகம் தெரிந்து நட்பு பாராட்டியதை விட முகம் தெரியாமல் நட்பு பாராட்டியதே அதிகம், இது பெரிய விஷயம். அதனால் தான் இவரையும் வரச்சொன்னேன்.  

அடுத்தபடியாக இங்கு நீங்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறீர்கள்.  உங்களது மத்தியில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.  உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாயால் நன்றி சொல்லமுடியாது. ஆனால் இதற்கென்று என்னால் இன்னொரு வாய் வாங்க முடியாது. அதனால் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்படி ஒரு நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்து என்னுடைய புத்தகத்தை வெளியிட வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் குறிப்பாக விடா முயற்சியே வெற்றிக்கு வித்து என்பதை இரண்டாவது ஆண்டாக நிரூபித்துக்காட்டிய விழாக்குழுவினருக்கும் வயதில் மூத்த பெரியோருக்கும் வந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.