மூடர் கூடம் என்றால் முட்டாள்கள் சங்கமிக்கும் இடம் என்று பொருள் வருகிறது.  FOOLS GATHERING என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்கள்.  தலைப்பே நம்மை உள்ளே ஈர்க்கும் விதத்தில் இருக்கிறதே, கண்டிப்பாக படமும் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஞாயிறு மாலை காட்சிக்கு நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.
அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாத நான்கு பேர் சந்திக்க நேரிடுகிறது.  ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு Flashback.  சீட்டு கம்பெனி ஓனரான ஜெயப்பிரகாஷின் வீட்டைக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.  அங்கே நடக்கும் சுவாரஸ்யமான காட்சிகளே மூடர் கூடம்.


இதில் முக்கிய ஹைலைட் படம் நெடுக இழையோடியிருக்கும் மெல்லிய நக்கல் நையாண்டி.  எந்தக் கதாபாத்திரமுமே புத்திசாலி இல்லை.  திருடுவதாக திட்டம் தீட்டியதும் முகத்தை மறைக்க முகமூடி வாங்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது, தமிழ் பேசும் சேட்டு, தாவூத் இப்ராகிமின் சென்னை கிளை அலுவலகம், அங்கு பிணைக் கைதியாய் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நபர், படிக்கத் தெரியாத திருடனிடம் ஒரு சிடியையும் ஒரு பொம்மையையும் திருடி வரச்சொல்லும் முட்டாள் வியாபாரி, புதுப்பேட்டை ரவுடி, குட்டிப்பையன், குட்டிப்பெண், நாய், முஸ்லிம் பையனைக் காதலிக்கும் ஓவியா, வீட்டு வேலைக்காரன்  என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.


அவ்வளவு பெரிய வீட்டில் திருட வந்து ஒன்றுமே கிடைக்காமல் போக விசாரிப்பதில் தெரிகிறது, ஜெயப்பிரகாஷ் சீட்டுக் கம்பெனி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பத்துடன் துபாய் போய் செட்டில் ஆக திட்டமிட்டிருப்பது.  அவருடைய பார்ட்னர் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மட்டும் எமர்ஜென்சிக்காக வைத்துக்கொண்டு மற்ற பணத்தையெல்லாம் துபாய் வங்கிக்கு மாற்றிவிட்டதாகவும் இருக்கும் இரண்டு லட்சத்தை மட்டும் எடுத்து வருவதாகவும் கூற, இது போதும் என்று முடிவு செய்கிறார்கள் திருட வந்தவர்கள்.  கடைசியில் அந்தப் பணமும் வேலைக்காரியின் மகளுக்கு ஆப்பரேஷன் செலவுக்கு தானமாக கொடுத்துவிடுகிறார்கள்.
ஒவ்வொரு கேரக்டரும் கிடைக்கிற கேப்பில் சிக்சர் அடித்துவிடுகிறார்கள்.  திருடன் மீது குட்டிப்பையனுக்கு ஏற்படும் நம்பிக்கையும், அதனால் அவனே கையில் பேட்டை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்தினர் எந்த முட்டாள் தனமும் செய்யாமல் காவல் காப்பது, தவறு செய்யும் பிணைக்கைதிகளை முட்டி போடச்சொல்லுவதும் தலைகீழாக நிற்கச் சொல்லுவதும், ஒரே ஒரு சீனியர் சிட்டிசன் தனக்கான உரிமைக்காக குரல் கொடுப்பதும் என பல இடங்களில் நக்கல் நையாண்டியில் கலக்கியிருக்கிறார்.


இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆரம்பம் முதல் கடைசி வரை மெதுவாகவே பயணிக்கும் திரைக்கதை, அதிகம் பின்னணி இசை இல்லாமல் "டொய்" என்ற சப்தம் மட்டுமே அடிக்கடி வருவது, கதா பாத்திரங்களின் முகபாவனைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது, இடைவேளைக்குப் பின் வரும் சில தொய்வான காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் ஒரு சிறப்பான முயற்சியே.

நன்றி..