ஒரு படம்

நேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன்.  ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.  வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ.  ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனை பொறுத்தவரையில் தன்னுடைய வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.  படத்துக்கு பளிச் என்று பொருந்துவதால் பட்டையைக் கிளப்புகிறார்.  இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் நாயகனை வேலைவெட்டி இல்லாத ஊர்சுற்றியாக காட்டுவார்களோ தெரியவில்லை.


நாயகி ஸ்ரீதிவ்யா ஸ்கூல் படிக்கும் பெண்னாம்.  யூனிபார்மில் அப்படியே ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்றும் புடவை கட்டிவரும்போது ஒரு பெரிய பெண்ணைப் பார்ப்பது போன்றும் நமக்கே தோன்றுகிறது.  இதை ஹீரோவே படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.


ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் பிந்து மாதவி அழகு.  முதலில் இவர்தான் ஹீரோயின் என்று நான் நினைத்திருந்தேன்.  பிளஸ் ஒன் டீச்சர் என்றால் மட்டும் நம்பமுடியவில்லை.


படத்தில் ஹீரோவுடன் சேர்ந்து காமெடி செய்வது புரோட்டா சூரி.  டைமிங் காமெடியில் மனிதர் கலக்குகிறார்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது, இதேபோல் தொடரவும்.

இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை போல் தோன்றினாலும் காமெடியும் பாடல்களும் நமக்கு அலுப்பு தட்டாமல் படத்தைக் கொண்டு செல்கின்றன.  மொத்தத்தில் கதை, லாஜிக் என்றெல்லாம் பாராமல் படம் பார்த்தோமேயானால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கலக்கல் காமெடி பட்டாசு.

இன்னொரு படம்

இது திரைப்படம் அல்ல, பதிவர் சந்திப்பில் கவியாழியின் கேமராவில் எடுத்த படம்.  பிளசில் பகிர்ந்திருந்தார், அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.  ஒவ்வொருவருடைய முக பாவங்களைப் பாருங்கள்.  சிரிப்பு சிரிப்பாக வரும்.ரெண்டு டிரைலர்

நேற்று மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் இரண்டு டிரைலர் காட்டினார்கள்.  ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிமேஷனில் வரப்போகும் கோச்சடையான்.  பிரம்மாண்டமாக இருக்கும் இந்த டிரைலர்.  இன்னொன்று இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி, சந்தானம் நடித்த All in All அழகுராஜா படத்தின் டீசர்.  இது மிகவும் simple ஆக இருக்கும். இரண்டையும் பாருங்கள்.
நன்றி.