அனைவருக்கும் வணக்கம்.


அவியலா, மிக்சரா கொத்துபுரோட்டாவா என்று பதிவிட்டதில் ஒரு பரிசுப்போட்டி அறிவிக்கும் அளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ், கடைசியில் கலர் பென்சில் என்று பெயர் வைத்தாயிற்று.  பலரும் பல பெயர்கள் பரிந்துரைத்திருக்க எனக்கு இரண்டு பெயர்கள் மனதில் இதுவா அதுவா என ஊசலாடிக்கொண்டிருந்தன.  ஒன்று அதிகம் பேரால் பரிந்துரைக்கப்பட்ட "ஹோம்வொர்க்ஸ்", மற்றொன்று Madhu Sridharan அவர்கள் பரிந்துரைத்த "ஸ்பெஷல் கிளாஸ்". இருந்தாலும் "கலர் பென்சில்" என்ற பெயர் நேற்று இரவு தான் முடிவு செய்தேன்.  சிம்பிளாக இருக்கிறது. என்னை மதித்து பின்னூட்டத்தில் பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி.

மேலே படத்தில் காணும் இடம் வேளச்சேரி ரயில் நிலைய பார்க்கிங். நாளொன்றுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வந்துசெல்கின்றன. தினமும் காலையிலும் மாலையிலும் பார்த்துப் பழக்கப்பட்ட இடம் என்றாலும் எந்நாளும் என்னால் மறக்க முடியாத இடம். காலை ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு நிறுத்திய இடத்தை மறந்துபோன சம்பவங்கள் உண்டு.  அவ்வாறு மறந்த நாட்களில் மாலையில் வண்டியைத் தேடி சுற்றிய அனுபவமும் உண்டு.  நான் மட்டுமல்ல, பலரும் இவ்வாறு தேடுவதை தினமும் பார்க்கலாம். ஹெல்மெட்டைப் பூட்டிவைக்க சோம்பல்பட்டு கண்ணாடியில் சொருகி வைத்திருக்க அதுவே பழகிப்போனது.  ஒரு நல்ல நாளில் ஹெல்மெட் திருடுபோக அன்று முதல் அவசரத்தைக் கைவிட்டேன்.  ஹெல்மெட்டை நன்றாகப் பூட்டிவிட்டு வண்டி நிறுத்திய இடத்தை வரிசை எண் கொண்டு மனதில் வைத்துக்கொள்கிறேன். ரிமோட் அலாரம் ஒன்று வாங்கி மாட்டினால் சௌகர்யமாக இருக்கும்.


சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிய போஸ்ட்பெய்டு கனெக்சன் வாங்கவேண்டும் என்று சொல்ல,பிரபல மொபைல் நிறுவனத்தின் பிரதிநிதியை அலுவலகத்துக்கு வரவழைத்தோம். பிளான் பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டு அவரிடம் ஒரு பேன்சி எண் வேண்டும் என்று நண்பர் கேட்க, அவர் தனது அலுவலகத்துக்குத் தொலைபேசிவிட்டு, "சார் அதுக்கு இருபதாயிரம் ரூபாய் ஆகும்" என்றார்.  அதிர்ந்து போனோம். லட்சக்கணக்கில் விலைபோகும் பேன்சி எண்களும் உண்டு என்றாரே பார்க்கலாம். அப்படியென்றால் தினந்தோறும் புதிதுபுதிதாக முளைக்கும் கால் டாக்சி முதல் அமேசான் காடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் வரை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?


பதிவர் என் ராஜபாட்டை ராஜா http://www.rajatricks.com/ என்ற பெயரில் ஆங்கிலத் தளம் ஒன்று தொடங்கியிருக்கிறார்.  ஆண்டிராய்டு அப்ளிகேஷன், மொபைல் டிரிக்ஸ் என்று எழுதுகிறார். கூகிள் ஆட்சென்ஸ் மூலம் பணம் வரும் என்பதால் அவருக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம். ராஜா, நீங்களும் தினம் தினம் பதிவெழுதிக் கலக்கவேண்டும்.


நண்பர் ஒருவரின் தந்தை துணிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு சொந்தமாக கடையோ அலுவலகமோ கிடையாது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னரே அனுமதி பெற்று அங்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விற்பனை செய்துவருகிறார். பெண்களுக்கான சுடிதார், நைட்டி மற்றும் புடவைகள் அதிகமான அளவில் வைத்திருக்கிறார், விலையும் குறைவாகவே இருக்கிறது. சென்னையில் எங்கிருந்தாலும் வீட்டுக்கே எடுத்து வருகிறார், கணிசமான அளவு விற்பனை இருப்பின் வெளியூர்களுக்கும் வந்து விற்பனை செய்யத் தயாராய் இருக்கிறார். கடந்த வாரம் ஒரு நாள் ராஜ கீழ்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் என் நண்பர், தாய் தந்தை மற்றும் மனைவியுடன் சேர்ந்து வியாபாரம் செய்தது மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என்னாலான சிறு உதவி - ஒரு சிறு விளம்பரம். மேலும் இந்த வருடத்துக்கான தீபாவளி துணிகளை அவரிடமே எடுக்கவிருக்கிறேன். விருப்பமிருப்பின் தொடர்பு கொள்க.என் அம்மா - எனக்காகக் கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்யும்போது - அம்மா, நீங்கள் அடுத்த ஜென்மத்தில் எனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் - நான் உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் - உங்களது சேவைகளுக்கு ஈடு செய்யவேண்டும் - என்று தோன்றுகிறது. என் மகள் - ஒவ்வொரு சேட்டை செய்யும்போதும் - ஏய், இதை எடுக்காதே, அதை செய்யாதே - அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகனாகப் பிறந்து உன் உயிரை வாங்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.


என்ன நண்பர்களே, கலர் பென்சில் எப்படி? எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்களுக்கு எதைப்பற்றி கருத்து சொல்ல விருப்பமோ அதை மட்டும் சொன்னாலும் போதும். கருத்து சொல்ல வேண்டும். அவ்வளவே.


நன்றி.