வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தன் எதிர்வீட்டு நந்திதா மீது ஒருதலைக் காதல்.  அதிகாலை எழுந்து பல் கூட விளக்காமல் வாசலில் கோலம் போட வரும் நந்திதாவை ரசிப்பதற்காக காத்திருக்கிறார்.  தினம் தினம் இம்சை செய்கிறார்.  இதைப் பொறுக்க முடியாத இவர் தன் தந்தையின் மூலம் சுகர் பேஷன்ட் அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்து செய்கிறார்.  இது ஒரு கதை.


ஒரு தனியார் வங்கியில் வேலை செய்யும் அஸ்வின் சுவாதியைக் காதலிக்கிறார்.  குடிக்கவே மாட்டேன் என்று சுவாதியின் தலையில் கைவைத்து சத்தியம் செய்துவிட்டு மீண்டும் குடிக்கிறார்.  இதனால் தனது வருங்கால மாமனாரை ஏர்போர்ட்டில் சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறார்.  இதனால் காதலியின் கோபத்துக்கு ஆளாகிறார், மீண்டும் குடிக்கிறார்.  குடித்துவிட்டு இரவில் வண்டி ஓட்டும்போது மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மீது மோதிவிடுகிறார்.  அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது வேறு ஒரு கதை.


ஒரு பெண்ணின் கள்ளக்காதலர்கள் இரண்டு பேர் டாஸ்மாக்கில் அவளது கணவனைக் கத்தியால் குத்திக் கொல்கிறார்கள்.  பின் ஒரு சைக்கிளையும் விஜய் சேதுபதியின் போனையும் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள்.  கொல்லப்பட்ட ஆளின் தம்பியான பரோட்டா சூரி இந்த விஷயத்தைக் கண்டுபிடித்து (!) மூன்று பேரையும் கொல்வதற்காக வீட்டில் காத்திருக்கிறார்.  இது வேறு ஒரு கதை.


ஒரே நேரத்தில் நடக்கும் வேறு வேறு கதைகளைப் பிரித்துக் காட்டி மூன்றையும் இணைத்து கடைசியில் ஒரு நல்ல முடிவாய் சொல்லியிருக்கும் படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.


படம் தொடங்குவதே டாஸ்மாக் பாரில்தான்.  கடைசி முடியும் வரை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் குடிக்கிறார்கள்.   நல்ல வேளையாக பெண்கள் குடிப்பதுபோல் காட்டவில்லை. ஒரு காட்சியில் காலி பாட்டில் குவியல்களையும் காட்டுகிறார்கள்.


விஜய் சேதுபதிக்கு நடிப்பு சர்வ சாதாரணமாக வருகிறது.  சூது கவ்வும் படத்துக்குப் பிறகு கொஞ்சம் சதை போட்டிருக்கிறார்.  எந்த மேக்கப்பும் இல்லாமல் சிவப்பேறிய கண்களுடன் நிறைய முடியும் தாடியும் விட்டு அவர் வசனம் பேசும்போது நிஜ குடிகாரர் மாதிரியே இருக்கிறார்.  அண்ணாச்சி பசுபதியிடம் பட்டிமன்றம் ராஜாவை ஓரம் கட்டிவிட்டு இவர் செய்யும் அலப்பரைகள் செம ரகம்.


அஸ்வின் நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  காதலியிடமும் மேனேஜரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் கேரக்டர்.  பின்னி எடுத்திருக்கலாம்.  எனினும் கதை ஓட்டத்தில் குறைகள் தெரியவில்லை.  மற்றவர்கள் சும்மா வந்து செல்கிறார்கள், அவ்வளவே.  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் MS பாஸ்கர்.  ஒரு இளம்பெண்ணின் முன்னால் அஸ்வினை திட்டுவதாகட்டும், தனக்குக் கீழ் வேலைசெய்யும் சேல்ஸ்மேன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க Conference-இல் பேசுவதாகட்டும், கடைசியில் அச்வினுடைய இன்சென்டிவ்வைக் கொடுக்காமல் சேர்த்துவைத்திருந்து அதை அவரிடம் காட்டும் காட்சியிலும் கலக்கியிருக்கிறார்.


இடைவேளையின் முன்பு திடீரென்று படம் சீரியஸ் டைப்பாகப் போகிறது, இருந்தாலும் இடைவேளையின்போது இது சீரியஸ் படம் அல்ல என்று சொல்லிவிடுகிறார்கள். பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை அதைவிட சுமார் ரகம்.  படம் முழுக்க அனைவரும் குடிப்பதாகக் காட்டிவிட்டு கடைசியில் யாரும் குடிக்காதீங்க என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  விஜய் சேதுபதியின் நடிப்பு நன்றாக இருந்தாலும் கடைசி அரை மணி நேரத்தில் சுவாரஸ்யமாகக் கொண்டுசென்றிருந்தாலும் படமும் சுமார் ரகமே.


படத்தின் டிரைலர் பார்க்க