ஆரம்பம் ஆரம்பித்தவுடனேயே அஜித் மும்பையின் முக்கியமான மூன்று இடங்களில் குண்டு வைக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று போலிசுக்கு போன் செய்து சொல்கிறார். போலிஸ் வந்து மக்களை அப்புறப்படுத்தி வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களால் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யமுடியாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் மூன்று கட்டிடங்களும் தரைமட்டமாகின்றன.
சென்னையிலிருந்து மும்பைக்கு இன்டர்வியுக்காக புறப்படும் ஆர்யாவை கல்லூரியில் உடன் படித்த நயன்தாரா விமான நிலையத்தில் சந்திக்கிறார். இங்கே ஒரு பிளாஷ்பேக் வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது குண்டுப் பையனாக இருக்கும் ஆர்யா சக மாணவியான டாப்சியை விரும்புகிறார். தன் உருண்டை உடலை உருக்கி தசைகளை இறுக்கி தற்போதைய ஆர்யாவாக வந்து மீண்டும் propose செய்து டாப்சியின் காதலைப் பெறுகிறார். கம்ப்யுட்டர் புலியான அவரைப் பயன்படுத்தி டாப்சியைக் கொன்றுவிடுவதாக மிரட்டி அஜித்தும் நயன்தாராவும் ஒரு மிகப்பெரிய டிவி சேனல் நெட்வொர்க்கை ஹேக் செய்கிறார்கள்.


வேண்டா வெறுப்பாக இந்தச்செயலில் ஈடுபடும் ஆர்யா அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அஜித்தை போலீசில் சிக்கவைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது பிளாஸ்பேக்.


அஜித்தும் ராணாவும் நண்பர்கள், Anti-Terrorism-Squad-இல் அதிகாரிகள். ஒரு தீவிரவாதி கும்பலைப் பிடிக்கப்போகும்போது துப்பாக்கி தோட்டா துளைத்து ராணா உயிரைவிடுகிறார். புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருக்கும் அவர் எப்படி இறந்தார் என்ற ஆராய்ச்சியில் அஜித் இறங்க, அந்த ஜாக்கெட்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குக் காரணமான போலிஸ் அதிகாரிகளையும் மந்திரியையும் அவர் கேள்வி கேட்க, அவர்கள் இவரிடமும் ராணாவின் மனைவியிடமும் பேரம் பேசுகிறார்கள். சொல்லி வைத்தாற்போல் யாரும் மசியாமல் போக, அவர்கள் அஜித்தையும் ராணாவின் குடும்பத்தாரையும் கொன்றுவிடுகிறார்கள். நிற்க, இங்கே அஜித்தும் நயன்தாராவும் இவர்களின் நண்பரும் மட்டும் சாகவில்லை. தப்பிப்பிழைத்த இவர்கள் மூவரும் சேர்ந்து ஊழல் அரசியல்வாதிகளையும் போலிஸ் அதிகாரிகளையும் ஆர்யா துணைகொண்டு எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது இரண்டாம் பாதி.அஜித் செம ஸ்மார்ட். நரைத்த முடியுடன் கண்களில் கண்ணாடி மாட்டிக்கொண்டு அவர் நடக்கும்போது ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். வயதைப்பற்றியோ தலைமுடி பற்றியோ கவலைப்படாத பெரிய ஹீரோக்களில் ரஜினிக்குப் பின் இவர்தான். படம் முழுவது டி-சர்ட் தான் அவருடைய costume. ஆர்யாவை மிரட்டி வேலைவாங்கும் காட்சிகளில் பின்னுகிறார். அக்ஷரா கோடாவுடனான வங்கிப் பரிவர்த்தனைக் காட்சியில் அஜித் ரசிகர்கள் அல்லாதவரும் ரசிப்பார்கள்.


நயன்தாராவுக்கு நன்றாக நடிக்க வருகிறது. ஆனால் முகத்தை க்ளோஸ்அப்பில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் இணையத்தில் உலவிவரும் ஒரு படம் இந்தப்படத்தில் இடம்பெற்ற காட்சி என்பதை படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொண்டேன்.


சமகாலத்து சாக்லேட் பாய் என்று ஆர்யாவை முத்திரை குத்திவிட்டார்கள் போலும். நடிக்கவே வரவில்லை என்றாலும் காட்சி அமைப்புகளில் அந்தக் குறை தெரியவில்லை. கல்லூரியில் படிக்கும்போது வரும் காட்சிகளில் ரசிக்க முடியவில்லை. அதை வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம், ஆர்யாவின் முகத்தைப் பார்க்கும்போது ஆதவன் படத்தில் வரும் சின்ன வயது சூர்யா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.  பாடல் காட்சியில் வரும் கிராபிக்ஸ் சிறகுகள் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. டாப்சி வழக்கம்போல லூசு நாயகி. வேறு எதுவும் சொல்வதற்கில்லை.நல்ல போலிசாக வரும் கிஷோரும் கெட்ட போலிசாக வரும் அதுல் குல்கர்னியும் ஓரிரு காட்சிகள் தவிர மற்ற இடங்களில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமா ரங்கநாத் சில காட்சிகளே வந்தாலும் நல்ல நடிப்பு. வில்லனாக வரும் மகேஷ் மஞ்சரேக்கர் மிஸ்டர் பீன் போலவே இருக்கிறார், செம நடிப்பு.


படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். மீறல் என்ன, லாஜிக்கே இல்லை. அவ்வளவு டிவி சேனலின் நெட்வொர்க்கை ஐந்தே நிமிடத்தில் ஹேக் செய்கிறார் ஆர்யா. சுவிஸ் வங்கியின் நெட்வொர்க்கை உடைத்து அங்கிருந்து பணம் எங்கே மாற்றப்பட்டது என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே கண்டுபிடிக்கிறார். கல்லூரி காலத்திலேயே அவர் பெரிய ஹேக்கர் என்று justify செய்தாலும் இவ்வளவு பெரிய விஷயங்களை செய்வார் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அஜித்தும் ஆர்யாவும் போலீசில் பிடிபட்டுவிட டாப்சியைக் காப்பாற்ற போலீசிடம் தான் வெளியே செல்லவேண்டும் என்று கேட்கிறார், அந்தப் போலிசும் விட்டுவிடுகிறார்.


அஜித் பயணம் செல்லும் அத்தனை ஊர்களிலும் அவருக்கு வேண்டிய ஆயுதங்கள் எப்படிக் கிடைக்கிறது? திட்டமிட்ட அடுத்த நிமிடம் சர்வ சாதாரணமாக துபாயில் இருக்கும் பெரிய வங்கிக்கு அடையாள அட்டையுடன் எப்படி ஆர்யாவும் அஜித்தும் நுழைகிறார்கள்? அத்தனை கோடி வைத்திருக்கும் அக்ஷரா கோடா வங்கியின் மூத்த அதிகாரி அல்லாதவரிடம் தன் கணக்கு விவரங்களைக் காட்டுவது என்ன லாஜிக்? கம்ப்யூட்டர் ஹேக்கிங் மட்டுமே தெரிந்த ஆர்யா கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பெரிய பெரிய துப்பாக்கிகளைக் கையாள்வது எப்படி?


இந்த மாதிரிப் படத்துக்கு பாடல்கள் பெரிய மைனஸ். எந்தப் பாடலுமே தேவையில்லை என்றே தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.


நிச்சயாமாக இந்தப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு பெரிய நடிகர் நடித்த ஆவரேஜ் ஹிட் படமே. தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே வெளியிட்ட தயாரிப்பாளரின் தொலைநோக்குப் பார்வை வியக்கவைக்கிறது.