எப்போ பாத்தாலும் ஹோட்டல், சினிமான்னு எழுதி ரொம்ப போர் அடிக்குது. எனக்கே இப்படின்னா படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்? அதனால இன்னிக்கு ஒரு மாற்றத்துக்கு எங்க குலதெய்வ சாமி பத்தி பாக்கலாம்.


எங்க அப்பாவின் மடியில் என் மகள்

எங்க குல தெய்வ சாமி பேரு கற்பக நாச்சியார் அம்மன். இதோ, மேல படத்துல பின்னணியில சீரியல் லைட் வெளிச்சத்துக்கு நடுவுல இருக்கிறது தான் அந்த சாமி. தெளிவான படம் கேக்காதீங்க, சாமியை போட்டோவே எடுக்கக்கூடாதுன்னு எங்க அப்பா உத்தரவு.  இருந்தாலும் என் மகளுக்கு முதல் மொட்டை எடுக்கும் சமயத்தில் சில கிளிக்குகள் அம்மனையும் சேர்த்து எடுத்துட்டதால அதில ஒண்ணு உங்க பார்வைக்கு.


எங்க இருக்கு? நம்ம ஊர் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி போற வழியில புளியங்குடி தாண்டி நாலு கிலோமீட்டர் போனா புன்னையாபுரம்னு ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கிருந்து வலது பக்கம் திரும்பி இரண்டு கிலோ மீட்டர் நடந்தா மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துல இயற்கை எழில் சூழ்ந்த எடத்துல கோவில்.


கோவில் தொடங்கும் இடம்


முன்னெல்லாம் வெறும் மண் ரோடு மட்டும்தான் இருக்கும், நடந்து மட்டும் தான் வரமுடியும். புளியங்குடியில் இருந்து புன்னையாபுரம் வரை ஆட்டோல வந்து மண் ரோட்டில இறங்கிருவோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் புளியோதரை, தயிர் சாதம் போன்ற சாப்பாடு, துணிமணிகளை சுமந்துட்டு ஊர்க்கதைகளைப் பேசிக்கிட்டு நடந்து வருவோம். இப்போ சில வருஷங்களுக்கு முன்னால தார் ரோடு போட்டாங்க. அதனால கோவில் வரைக்கும் ஆட்டோ வரும்.


வரவேற்கும் விநாயகர்


வனப்பகுதி தொடங்கும் இந்தக் காட்டுக்குள்ள நுழைஞ்சதும் நம்மை வரவேற்கிறது அரச மரமும் அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கிற பிள்ளையாரும் தான். அதுக்குப் பின்னால சில பல படிகள் ஏறிப்போனா அம்மன் இருக்கிற கோவில்.


மேல ஒரு மஞ்சள் கட்டிடம் தெரியுதே, அது தான் கோவில்

தல வரலாறு: இதைப்பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இணையத்துல தேடிப்பாத்தேன், கிடைக்கலை. ஒரு அழகான பொண்ணு தீய சக்திகளிடம் இருந்து தப்பித்து ஓடும்போது இரண்டு மலைகளுக்கு நடுவே சிலையாக மாறியதாக சிலர் சொல்றாங்க. இருந்தாலும் அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது பெரியவர்கள் யார் கிட்டயாவது கேட்டு சொல்றேன்.

குளிக்கும் இடம்


கோவிலுக்கு இடது புறத்தில் பக்தர்கள் குளிக்கறதுக்குன்னு தொட்டி கட்டி வச்சிருக்காங்க. என்ன விசேஷம்னா மலையில ஓடுற ஆத்துத் தண்ணி இங்க வர்ற மாதிரி மலையைக் குடைந்து பாதை அமைச்சிருக்காங்க. கூட்டம் அதிகமா இருக்கிற நாட்கள்ல மரத்தாலான மறைப்பு வச்சு ஆண், பெண் தனித்தனியா குளிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. வருஷத்துல ஆறு மாசம் தண்ணி வந்துட்டே இருக்கும். கோடை காலத்துல தண்ணியே இருக்காது. மழை கொஞ்சம் அதிகமா பெஞ்சதுன்னா மேல இருக்கிற பாறை மேலருந்து தண்ணீர் கொட்டும். நாங்க போனப்ப கூட அப்படித்தான் இருந்தது. பார்க்க படம்.

மலை மீதிருந்து கொட்டும் அருவி

பக்கவாட்டிலிருந்து

ஒவ்வொரு வருஷமும் மாசி மாத சிவராத்திரி மிகவும் பிரசித்தம். பல ஊர்கள்ல இருந்தும் ஆட்கள் வந்து சாமி கும்பிட்டுப் போவாங்க. சிவராத்திரி நாள் சாயங்காலத்தில் இருந்து அடுத்த நாள் மதியம் வரைக்கும் தொடர்ந்து பூஜைகள் நடந்துக்கிட்டே இருக்கும். மற்றபடி விசேஷ நாட்கள்ல மட்டும் கோவில் திறப்பாங்க. நமக்கு வீட்டில ஏதும் விசேஷம்னா பூசாரியைக் கூப்பிட்டு கோவிலைத் திறக்கச் சொல்வோம்.


கூட்டமே இல்லாதப்போ அங்க போய், ஏதாவது ஒரு பாறை மேல படுத்துக்கிட்டே குயில் மற்றும் மற்ற பறவைகளோட சத்தத்தையும் தண்ணீர் ஓடுற சலசலப்பையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.