காதலிக்க நேரமில்லை என்ற பழைய படம் அறுபதுகளில் வெளிவந்து சக்கைபோடு போட்டது. அந்தப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் சொல்வார், "நான் எடுக்குறது தான் படம், நீ நடிக்கிறது தான் நடிப்பு, இதை இந்த ஜனங்க பாத்தே தீரணும் அது அவங்க தலை எழுத்து" என்று. இந்த வரிகளை இயக்குநர் ராஜேஷ் மனப்பாடம் செய்துவிட்டார் போலும். ஓகே ஓகே கொடுத்த ஓவர் கான்பிடன்சில் தான் என்ன எடுத்தாலும் மக்கள் வந்து கைதட்டி சிரித்து ரசிப்பார்கள் என்று நினைத்துவிட்டார்.

இதுவரை ராஜேஷ் எடுத்த எந்தப்படத்துக்கும் கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே போல் இந்தப்படமும். கதை சொல்லலாம் என்றால் எதைச் சொல்வது? படம் நெடுக சந்தானமும் கார்த்தியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒன்றிரண்டுக்கு மட்டுமே சிரிக்க முடிகிறது.


கார்த்தி நிறைவாகச் செய்திருக்கிறார், சந்தானம் கார்த்தியின் ஆபிசர் கெட்டப்பில் சாதாரணமாக வருகிறார். கரீனா சோப்ரா கேரக்டரில் கலக்கலாகவும் பழைய கெட்டப்பில் கேவலமாகவும் இருக்கிறார். அதிலும் அவர் சிரிக்கிறேன் பேர்வழி என்று ஒரு முகசேட்டை செய்கிறார் பாருங்கள், சகிக்கவில்லை.

காஜல் அகர்வால் வழக்கமான லூசு ஹீரோயின். போன வருஷமும் தீபாவளிக்கு வெளிவந்த துப்பாக்கி படத்தில் இதே மாதிரி ஒரு லூசு கேரக்டரில் தான் நடித்திருந்தார். எம்.எஸ்.பாஸ்கரிடம் பரதம் கற்றுக்கொள்ளும் காட்சிகளில் தியேட்டரில் இருக்கும் அத்தனைபேரின் அப்ளாஸ்களை அள்ளுகிறார்.பிரபு தன் பங்குக்கு நிறைவாகச் செய்திருக்கிறார். சரண்யா கார்த்தியின் அம்மா. மேடம், உங்களுக்கு இருக்கிற திறமைக்கு வேற நல்ல கேரக்டர் பண்ணுங்க. இப்படி லிஸ்ட் போட்டு எல்லா நடிகர்களுக்கும் அம்மாவாக நடிக்கும் பழக்கத்தை தயவு செய்து விடுங்க. இன்னும் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள், பெயரளவிலேயே.


பிளாஸ்பேக்கில் பிரபுவின் பாத்திரத்தில் கார்த்தியே நடித்திருப்பது சிறப்பு. "உன்னப் பாத்த நேரம்" பாடலும் அதைப் படமாக்கிய விதமும் அருமை. கோட்டா சீனிவாச ராவ், சந்தானம் காட்சிகள் கலகல. பரதம் கற்றுக்கொள்ளும் காட்சியில் வரும் நடன அசைவுகளுக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. இவை தவிர்த்து படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை.


நான் இந்தப் படத்தைப் பார்த்தது மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில். இடைவேளை விட்டதும் நூறுக்கும் மேற்பட்டோர் வீட்டுக்குப் போய்விட்டனர். படம் முடிவதற்கு முக்கால் மணி நேரத்துக்கு முன் மேலும் ஒரு நூறு பேர் கிளம்பிவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து அடுத்த காட்சிக்காகக் காத்திருக்கும் அப்பாவி மக்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.