சென்னையின் சாலை வலி

கடந்த வாரத்தில் ஒரு நாள் - காலை அலுவலகத்துக்கு மிக அவசரமாகச் சென்றுகொண்டிருந்தேன். நந்தனம் நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த என் காதுகளில் அந்த சத்தம் தூரத்தில் ஒலித்தது.  அது ஆம்புலன்ஸ் - வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாகச் செல்ல ஆரம்பித்தேன், என்னைப்போலவே பலரும். யாருக்கு என்னவோ என்று மனதில் உச்சு கொட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த சத்தம் நெருங்கிவந்து என்னைக் கடந்துசென்றது. பரவாயில்லை, நம் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகிறார்கள் எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - மனித நேயம் செத்துவிடவில்லை. ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும் என் முன்னாலும் பின்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்தவர்களில் சிலர் அந்த வாகனத்தை வால் பிடித்தாற்போல் பின்தொடர ஆரம்பித்தனர். ஏற்கனவே ஒரு இருபது இருபத்தைந்து டூவீலர்கள் ஆம்புலன்சைத் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களுடனான போட்டியில் இவர்களும் கலந்துகொண்டனர். அப்போது தான் என் மண்டையில் உறைத்தது. அடப்பாவிகளா, ஆம்புலன்சுக்கு வழிவிடுதல் பொது நலம், மனித நேயம் என்றெல்லாம் நினைத்திருந்தேன், சிலருக்கு முழுக்க முழுக்க சுயநலமாகவே இருக்கிறது.