சென்னையின் சாலை வலி

கடந்த வாரத்தில் ஒரு நாள் - காலை அலுவலகத்துக்கு மிக அவசரமாகச் சென்றுகொண்டிருந்தேன். நந்தனம் நோக்கி சீறிப்பாய்ந்து கொண்டிருந்த என் காதுகளில் அந்த சத்தம் தூரத்தில் ஒலித்தது.  அது ஆம்புலன்ஸ் - வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாகச் செல்ல ஆரம்பித்தேன், என்னைப்போலவே பலரும். யாருக்கு என்னவோ என்று மனதில் உச்சு கொட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த சத்தம் நெருங்கிவந்து என்னைக் கடந்துசென்றது. பரவாயில்லை, நம் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகிறார்கள் எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - மனித நேயம் செத்துவிடவில்லை. ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும் என் முன்னாலும் பின்னாலும் இரு சக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்தவர்களில் சிலர் அந்த வாகனத்தை வால் பிடித்தாற்போல் பின்தொடர ஆரம்பித்தனர். ஏற்கனவே ஒரு இருபது இருபத்தைந்து டூவீலர்கள் ஆம்புலன்சைத் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களுடனான போட்டியில் இவர்களும் கலந்துகொண்டனர். அப்போது தான் என் மண்டையில் உறைத்தது. அடப்பாவிகளா, ஆம்புலன்சுக்கு வழிவிடுதல் பொது நலம், மனித நேயம் என்றெல்லாம் நினைத்திருந்தேன், சிலருக்கு முழுக்க முழுக்க சுயநலமாகவே இருக்கிறது.பதிவர்கள் அறிமுகம்

இனி ஒவ்வொரு கலர் பென்சில் பதிவிலும் ஒரு பதிவரை அறிமுகம் செய்யலாம் என்றிருக்கிறேன். முதல் முறை என்பதால் இன்று மூன்று பேர்.


இவரைப் பற்றி முகநூலில் பல பதிவுகள் மூலம் அறிமுகம் செய்துவிட்டேன். இருந்தாலும் மற்றவர்களுக்காக இங்கே. இவரது இயற்பெயர் சம்பந்தம். தஞ்சாவூர் (தஞ்சாவூரா கும்பகோணமா மறந்து போச்சே) பகுதியைச் சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் IBM நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் வேலை செய்து தற்போது சிட்னி மாநகரில் தமிழாசிரியராகப் பணி புரிகிறார். தலைவா படம் பார்த்தவர்கள் இவரையும் பார்த்திருக்கக் கூடும். சிறுகதைகள், அனுபவங்கள் என்று  நூற்று முப்பது பதிவுகளுக்கும் மேல் எழுதியுள்ளார், இதுவரை நம் சக பதிவர்கள் யாரும் பார்வையிடவில்லை. கூகிள் ஆண்டவர் உதவியால் இவருடன் நேருக்கு நேர் தொலைபேசியில் பார்த்துப் பேசும் பாக்கியம் கிடைத்தது. இவருடைய பதிவுகள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:மஞ்ச மாக்கான் என்று தலைப்பு வைத்திருக்கும் இவர் வலைப்பூ தொடங்கி அறிமுகம் மட்டும் செய்திருக்கிறார். மேலும், முகநூல் கணக்கும் தொடங்கி சில பதிவர்களுடன் நண்பர் வட்டத்தில் இணைந்துள்ளார். இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதுங்கள் நண்பரே. உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.இந்தப் பதிவரும் அறிமுகப் பதிவு மட்டுமே எழுதியிருக்கிறார்.  இவர் ஒருவரா அல்லது பலரா என்று தெரியவில்லை, வரிக்கு வரி நாங்க நாங்க என்று சொல்கிறார். சமர்த்தாக இருக்கையில் தான் கணேஷ் என்றும் லூட்டி அடிக்கையில் வசந்த் என்றும் சொல்கிறார். உற்சாகம் கரைபுரண்டோடும் இவரது அறிமுகப்பதிவில் மற்ற பதிவர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.  என் கடமை முடிந்தது. வாருங்கள் கணேஷ்-வசந்த். மிஸ்டு கால் மன்னர்கள்

சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தாங்கள் தொலைபேசியில் என்னை அழைத்திருந்தால் பேசவேண்டிய விஷயங்களை பட்டென்று பேசி தொடர்பைத் துண்டிப்பதுண்டு. நாம் வேறு ஏதாவது விஷயங்கள் கேட்க நேர்ந்தால் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லிவிடுவார்கள். இதே நாம் அவர்களை அழைத்திருந்தால், அப்புறம் வேற என்ன விஷயம் என்று கடலை போடுவதும் உண்டு. என் நண்பர் ஒருவர் எப்போது என்னிடம் பேசவேண்டும் என்றாலும் மிஸ்டு கால் மட்டுமே கொடுப்பார். அது எப்படியென்றால் எவ்வளவு நேரம் போன் அடித்தாலும் சரியாக பக்கத்திலிருந்து பார்ப்பவர் போல நான் எடுக்கப் போகையில் கட் செய்வார். இந்த மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் பிரபல காபி நிறுவனம் முதல் உடற்பயிற்சி இயந்திரம் விற்கும் நிறுவனம் வரை அனைவரும் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்கிறார்கள்.

வடா பாவ்

சில நாட்களுக்கு முன் வேளச்சேரியில் இருக்கும் GOLI என்ற பெயரில் இயங்கும் அந்தக் கடைக்குச் செல்ல நேர்ந்தது.  நேர்ந்தது என்றால் "மெட்ராஸ் பவன் சிவாவின் அழைப்பின்பேரில் மின்னல்வரிகள் பாலகணேஷ் அவர்களுடன் சென்றிருந்தேன், Classic Vada Pav, Mix Veg Vada Pav, Masala Vada Pav, Aloo Tikki Vada Pav, Cheese Vada Pav, Schezwan Vada Pav, Makka Palak Vada Pav, Cheese Ungli மற்றும் sabudana Vada ஆகியவை கிடைக்கின்றன. வெறும் பெயரை மட்டும் படித்தால் ஒன்றும் புரியாது, பதார்த்தங்களைப் படத்தில் பார்க்கும்பொது வாயில் ஊறுகிறது. மூன்று பேருக்கு மேல் உட்கார்ந்து சாப்பிடும் வசதி இல்லாததால் சென்ற வாரம் நான் அந்தப்பக்கமாகச் சென்றிருந்தபோது பார்சல் வாங்கிக்கொண்டேன்.சுடர்விழியுடன் ஓர் நேர்காணல்

திருப்பதி ஏழுமலையானின் தரிசனம் முடிந்து நேற்று காலை பதிவர் மகேஷ் அவர்களை சந்தித்தேன். ஏற்கனவே அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன். தான் திருப்பதியில் வசிப்பதாகத் தெரிவித்திருந்த அவரை அடுத்த முறை பாத யாத்திரை வரும்போது சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். சொன்னபடியே நேற்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தேன், பல விஷயங்கள் பேசினோம், நேரமின்மையால் உடனடியாகப் புறப்பட வேண்டியதாயிற்று. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நன்றி மகேஷ்.


ஒரு சந்தேகம்

மெட்ராஸ்பவன் சிவா:  சாதா போனுக்கும் ஸ்மார்ட் போனுக்கும் என்ன வித்தியாசம்?

நான்: மூணு நாளைக்கு பேட்டரி நின்னா அது சாதா போன், மூணு மணி நேரத்துக்குள்ள சார்ஜ் போயிருச்சுன்னா அது ஸ்மார்ட் போன்.


அனைவருக்கும் பின்னூட்டம்

சைலன்ட் ரீடர்கள் பலரும் என்னுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் தங்களால் கருத்து சொல்ல முடியவில்லை என்றும் போனிலும் பேஸ்புக்கிலும் குறைபட்டிருந்தார்கள். இதனைப்போக்க பின்னூட்டப்பெட்டியைத் திறந்துவிட்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் கருத்துரையிடலாம். ஆனால் தயவுசெய்து உங்களது பெயரைச் சொல்லவும். வரைமுறையின்றியோ அல்லது தனிநபரைத் தாக்கும் விதமாகவோ வரும் கருத்துக்கள் நீக்கப்படும்.


நன்றி.