திரும்பிப் பார்க்கிறேன்கிற பதிவு எழுதி நண்பர் ராஜபாட்டை ராஜாவும் ராஜி அக்காவும் என்னை கோர்த்து விட்டிருந்தாங்க. ஆனா பாருங்க, அதிகமான வேலை மற்றும் சோம்பல் காரணமா எழுத முடியாம போச்சு. வருஷமும் முடிஞ்சு போச்சு, இருந்தாலும் எழுதலைன்னா நண்பர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதால இதோ, இந்தப்பதிவு.
சொந்த வாழ்வு

புது வருஷம் 2013 அதிரடியாகத்தான் தொடங்கியது. 2012இல் ஊரில் வெடித்த ஒரு பிரச்சனை இன்னும் முழுமை அடையாமல் புகைந்துகொண்டிருக்க ஜனவரி பத்தாம் தேதி வாக்கில் மீண்டும் பெரிதாய் வெடித்தது. நானே களமிறங்கினால் தான் முடிக்க முடியும் என்பதால் குடும்பத்துடன் விமானத்தில் சென்று வந்தேன். இதற்குக் கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் பிரச்சனையின் தீவிரத்துக்கு இது சரிதான் என்றே தோன்றுகிறது.


புத்தகச் சந்தையில் பல புத்தகங்களை வாங்கினேன். கொடுமை என்னவென்றால் ஓரிரு புத்தகங்கள் தவிர மற்றவை அனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வருடமும் புத்தகச் சந்தை தொடங்கப் போகிறது. வாரம் ஒரு புத்தகம் என்கிற ரீதியில் டார்கெட் வைத்துப் படிக்க வேண்டும்.


ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. நான் வசித்துவந்த வீட்டின் வாஸ்து சரியில்லை என்று ஒரு ஜோதிடர் சொல்ல, என் அம்மாவும் அதைப் பிடித்துக்கொண்டு வீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், வீட்டை மாத்து சரவணா என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிருந்த வீட்டு ஓனர் வேறு வாடகையைக் கூட்டப்போவதாகச் சொல்ல, வீடு மாற்றுதல் உறுதியானது.


வீடு மாறுவதென்றால் மகனுக்கு ஸ்கூல் மாற்ற வேண்டும். முதலில் பல இடங்களில் ஸ்கூல் தேடி அலைந்து கடைசியில் அலுவலக நண்பர் தங்கியிருக்கும் உள்ளகரம் பகுதியில் உள்ள ஸ்கூலில் இடம் கிடைத்தது. ஸ்கூலில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்திலேயே வேறு ஒரு நண்பரின் வீடு வாடகைக்குக் கிடைக்க, இதோ ஒன்பது மாதமாக தினமும் மகனை ஸ்கூலில் விட்டுவிட்டு வேளச்சேரி சென்று அங்கிருந்து மின்சார ரயிலில் மயிலாப்பூர் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


கடந்த வருடமும் மூன்று முறை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம், அதுவும் திருப்பதியிலிருந்து திருமலா வரை பாத யாத்திரை. இந்த வருடமும் அது தொடருமா தெரியவில்லை. அடுத்ததாக பல வருடங்கள் கனவான சபரி மலை யாத்திரை இந்த வருடம் நிறைவேறியது. அது பற்றிய தனியாகப் பதிவு ஒன்று எழுதுகிறேன்.


பணப் பிரச்சனை

பணத்தைப் பொறுத்தவரை பழைய கடன்கள் பெருமளவு அடைபட்டிருக்கின்றன. புதிதாய் ஓரிரு கடன்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தின் இறுதிக்குள் இன்னும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.


வலையுலகம்

வலையுலகைப் பொறுத்த வரையில் எனக்கு பதிவர்கள் அனைவரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு என்பதால் மிகவும் மகிழ்ச்சி. நடேசன் பூங்காவில் வாத்தியாரையும் சீனுவையும் சந்தித்தது முதல் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளுக்கு வாராந்திர கூட்டத்தில் கலந்துகொண்டது, அதன் பின்னர் பதிவர் திருவிழாவில் (யார் யார் என்று சொன்னால் பட்டியல் நீளும் என்பதாலும் சிலர் விட்டுப்போகும் அபாயம் உள்ளதாலும் பெயர்கள் குறிப்பிடவில்லை) பலரையும் சந்தித்தது என பல இனிமையான நினைவுகள்.
ஆகஸ்டு மாதத்தில் ஒரு பிரபல பதிவருடன் லேசான உரசல் ஏற்பட, அவரைப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு வழியாக பதிவர் திருவிழா முடிந்த அன்று மாலை அவர் எனக்கு சமாதானக்கொடி காட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது.


இறுதியாகத் திரும்பிப் பார்க்கும்போது 2012இல் இருந்த அளவுக்கு தற்போது இல்லை. புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய வருடம் எப்படி இருக்கப்போகிறது என்று போகப்போகத் தெரியும்.