பதிவர் சந்திப்பு

இந்த வருடம் தொடங்கியது முதலே பதிவர் சந்திப்பாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது. ஜன.1 ஆம் தேதி எங்கள் ப்ளாக் கௌதமன் சார் சென்னையில் சந்திப்பதாக முகநூலில் அழைப்பு விடுக்க, நான், வாத்தியார் பால கணேஷ், கோவை ஆவி, சீனு, ரூபக் ராம் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அடுத்தடுத்து பதிவர்களின் புத்தக வெளியீடு, புத்தகத் திருவிழா என்று நேற்று பதிவர் சேட்டைக்காரன் அவர்களின் சென்னை விஜயம் வரை இந்த ஆண்டு பதிவர் சந்திப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.

பிரிந்தோம், சந்தித்தோம்

1997 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து முடித்ததும் அவரவர் தங்களது வழி நோக்கிச் சென்றுவிட யாரும் யாரிடமும் அதிக தொடர்பிலில்லை. இருந்தாலும் சென்னையிலேயே நிறைய பேர் இருப்பதால் சென்னை நண்பர்கள் மட்டும் எங்காவது சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எல்லாருக்கும் பொதுவான ஒரு இடமாக எங்கள் வீடே அமைய கடந்த ஞாயிறன்று வீட்டிலேயே சந்தித்தோம். நாள் முழுவதும் பழைய நினைவுகளுடன் குதூகலமாகச் சென்றது.ஒரு சம்பவம்

கடந்த வாரத்தில் ஒரு நாள். இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். ஆதம்பாக்கம் பகுதியில் செல்லும்போது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பைக்கில் துரத்திக்கொண்டிருந்தான். காலை நேரம் என்பதாலும் குறுகிய சாலை என்பதாலும் வாகன நெரிசல் அதிகம் இருந்தது. அவன் முன்னே செல்வதும் அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்ல எத்தனிப்பதும் பின் டிராபிக்கால் சொல்ல முடியாமல் போவதுமாக இருந்தது. நானும் அவனை விடாமல் துரத்திக்கொண்டிருந்தேன். அவன் அந்தப் பெண்ணுடன் என்ன சொல்லப்போகிறான் என்று எனக்குப் புரிந்துவிட்டது. அந்தப்பெண் அணிந்திருந்த துப்பட்டா பின் சக்கரத்துக்கு அருகே பட்டும் படமாலும் உரசிக்கொண்டே வந்தது. ஒரு வழியாக நெருங்கி விஷயத்தை சொல்ல, அந்தப்பெண்ணும் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டார். அதற்குள் நான் அந்தப்பையனை நெருங்கி விட்டேன். அவனிடம் சொன்னேன், "தம்பி, சைடு ஸ்டாண்டை எடுத்து விடுப்பா".


பார்த்த திரைப்படம்

தெகிடி. அர்த்தம் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை. இணையத்தில் நண்பர்கள் நன்றாக இருப்பதாகச் சொல்ல, நேற்று மாலை ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி தியேட்டரில் பார்த்தேன். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். நாயகன் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியில் பணிபுரிகிறார். அவர் உளவு பார்க்கும் நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம் என்பதை வளவளக்காமல் பளிச்சென்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வருடத்தின் தவற விடக்கூடாத திரைப்படம்.
சுப முடிவு

"இப்படிக்கு இறந்து போனவன்" கதைக்கான முடிவு இப்படி இருக்கக்கூடாது என்று பலரும் பின்னூட்டத்தில் கூறியிருந்தார்கள். கதையின் நாயகன் வாழவேண்டியவன் என்றாலும் யதார்த்த வாழ்வில் நடக்கும் ஒரு விஷயத்தையே சொல்லியிருந்தேன். கதை சுபமாக முடிந்திருந்தால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும் என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் ஒரு நல்ல முடிவாக கடைசி பத்தியை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படியுங்கள்.


எனக்கே என்மீது கோபம் வந்தது. வண்டியை இன்னும் வேகமாகச் செலுத்தினேன். எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன் என்று தெரியவில்லை, அரை மணி நேரம் கடந்திருந்தது. எப்போதாவது கோபம் வரும் வேளையில் வண்டியை எடுத்துக்கொண்டு இப்படிச் செல்வது வழக்கம். மனம் லேசானது போலிருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். அங்கே வெளியே வாயெல்லாம் பல்லாக வெளியே நின்றுகொண்டிருந்தாள். "என்னம்மா?" என்றேன், "உன்னைப் பாக்க வந்திருக்காங்கடா" என்றாள். உள்ளே ஒரு தம்பதி. "நான், சுப்பிரமணியம். அடுத்த தெருவுல தான் குடியிருக்கேன். நீங்க பொண்ணு பாக்கப் போறதா கேள்விப்பட்டேன். அதான் நாங்களே தேடி வந்துட்டோம். ஒரு நல்ல நாளாப் பாத்து நீங்களே வந்து பொண்ணு கேளுங்க" என்றார். நான் கேள்விக்குறியோடு அவரையே பார்க்க, "பிரச்சனையில்லை, உங்களைப் பத்தி என் மகளுக்குத் தெரியும். தெரிஞ்சே தான் சம்மதிச்சா, உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.


எனக்கு நம்பிக்கையில்லை. இவர்களும் ஆசை காட்டி மோசம் செய்தால் என்ன செய்வது? வாசலிலேயே நின்றுகொண்டு யோசிக்கலானேன். என்னை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது. "அக்கா இதைக் கொடுக்கச் சொன்னாங்க" என்று என் கையில் ஒரு காகிதத்தைத் திணித்துவிட்டு ஓடிவிட்டான். என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே திறந்தேன். "என் உயிரிலும் மேலான உங்களுக்கு" என்று தொடங்கியிருந்தது அந்தக்கடிதம்.