அந்த சனிக்கிழமை இரவு ஒன்பது முப்பது மணிக்கு அம்மாவிடமிருந்து போன். "கோமதி ஆச்சி போய்ட்டாங்க சரவணா" அம்மாவின் கண்களில் கண்ணீர் உகுத்திருப்பது குரலில் தெரிந்தது. "என்னம்மா ஆச்சு?" மீதி விவரங்களைக் கேட்டுக்கொண்டேன்.

யோசிக்கவேயில்லை. உடனடியாக கால் டாக்சிக்கு போன் செய்தேன், கோயம்பேடு சென்றாகவேண்டும். மனைவி குழந்தைகளுடன் அந்த நேரத்தில் அதுவும் பேருந்தில் செல்வது அசௌகர்யம் என்பதால் நான் மட்டும் பயணப்பட்டேன். விசாரித்ததில் ராஜபாளையத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை, முதலாவதா நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் மதுரைக்குப் புறப்பட்டேன்.


சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல பெண்களுக்கு "கோமதி" என்று பெயர் வைப்பதுண்டு. எனக்கு கூட "கோமதி" என்ற பெயரில் மூன்று ஆச்சிகள். இறந்து போனவர் "குதிரை வண்டி ஆச்சி". பெயர்க்காரணம் - தாத்தா பல வருடங்களுக்கு முன்பு குதிரைவண்டி ஓட்டியவர். இப்போது ஆட்டோ.

பொதுவாக பேருந்துப் பயணம் என்றால் இரவில் சாப்பிடமாட்டேன், ஏன், பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டேன். காரணம் கண்ட நேரத்தில் முட்டும். மூச்சா போகாதவரை தூக்கமும் வராது. அன்று நான் கிளம்புகையில் நான்கு தோசைகளுடன் சாப்பிட்டிருந்த காரச்சட்னி தன் வேலையைக் காட்டிவிடுமோ என்ற பயம் இருந்தது.

ஆச்சி அப்பாவுக்கு சித்தி முறை தான். இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் அதிக ஆளுமையில் இருப்பவர்களில் அவரும் ஒருவர். மற்றவர்களை ஏவி வலை வாங்குவதில் ஆச்சிக்கு நிகர் ஆச்சியே. யாராவது அவர் சொன்ன வேலையை செய்ய மறுத்தால் அவ்வளவுதான் - ஆச்சியின் குரல் ஓங்கி உச்சத்தில் ஒலிக்கும். அவரது சத்தத்துக்குப் பயந்தே அனைவரும் அவர் சொல்பேச்சைக் கேட்போம். ஆச்சி - ஆளுமையின் அடையாளம்.

ஆச்சி மிகவும் அதிகாரம் பிடித்தவர் என்று எண்ணவேண்டாம். கடவுள் பக்தி நிறையவே உண்டு. ஊரிலுள்ள அனைத்து கோவில் பூசாரிகளுக்கும் ஆச்சியைத் தெரியும். தினம் தினம் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய்விடுவார். போகும்போதும், கோவிலிலும் திரும்ப வரும்போதும் யாரோடும் பேசமாட்டார். சாமி கும்பிடும்போது மட்டும் தன் கோரிக்கைகளை - முறையிடல்களை - மிக லேசான அதிர்வுடன் முணுமுணுவென்று சொல்லிக்கொள்வார். அவர் என்ன வேண்டிக்கொள்கிறார் என்பதைக் கூர்ந்து கேட்டால் நம்மிடம் கோபப்படமாட்டார். சிரித்துக்கொள்வார். சில நேரங்களில் அமைதியின் சின்னம்.

எனக்குப் பெண்பார்த்து திருமணம் முடித்து வைப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் ஆச்சி மட்டுமே. பெண் பார்க்கவேண்டும் என்று அம்மா ஆச்சியுடன் சொன்னபோதே, "ஆயிரம் பொண்ணக் காட்டுதேன்" என்றவர். ஆச்சியின் அதிர்ஷ்டமோ அல்லது என் நல்ல நேரமோ பார்த்த ஒரே பெண்ணுடன் திருமணமும் முடிந்தது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் பலருக்கும் பெண்பார்த்து திருமணம் செய்துவைத்த பெருமை ஆச்சியையே சாரும்.

ஸ்ரீவில்லிபுத்தூரைக் கடந்தபோதே அப்பாவிடமிருந்து அழைப்பு. ரயில்வே கேட் அருகே வந்து காத்திருந்து கூட்டிச்சென்றார். நேராக ஆச்சி வீட்டுக்குத்தான். தெருவை நெருங்கியபோதே தெரிந்தது. தென்னை ஓலைப் பந்தல் வெளியே போடப்பட்டிருந்த நீளமான பெஞ்ச், பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்த உறவுகள், வாசலெங்கும் இறைந்துகிடந்த செருப்புகள் இவையனைத்தும் அது ஒரு இழவு வீடு என்று பறைசாற்றின. சித்தப்பா வெளியேதான் நின்றுகொண்டிருந்தார். அழுதுஅழுது கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்ததும், "ஆச்சி உள்ள தான் இருக்கா, போய்ப்பாரு" என்றார்.

உள்ளே சென்றேன், நடுக்கூடத்தில் வடக்கு தெற்காகக் கிடத்தப்பட்டிருந்தார் ஆச்சி. கண்கள் இரண்டிலும் மஞ்சளோ சந்தனமோ கொண்டு அப்பியிருந்தார்கள். மூக்கில் பஞ்சு லேசான ரத்தக்கசிவால் சிவந்துபோயிருந்தது. என் அம்மா, "சரவணா, வந்துட்டியா இங்க பாரு ஆச்சி எப்படி இருக்காங்கன்னு" என்று அழத் தொடங்கினார். பக்கத்தில் அமர்ந்திருந்த சித்தியோ, "எத்தே, சரவணா வந்திருக்கான் பாருங்கத்தே" என்று அரற்ற ஆரம்பித்தார். ஆச்சியைப் பார்த்ததாலோ, சூழ்நிலை இருக்கமோ தெரியவில்லை. என் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. என்னைத் தேற்றுவதற்கோ சமாதானப்படுத்துவதற்கோ யாரும் அருகில் இல்லை. அனைவரும் சொர்ந்திருன்தனர். என்னால் விசும்ப மட்டுமே முடிந்தது.

தெருவெங்கும் உறவினர்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் "என்னய்யா, எப்படி இருக்க, பிள்ளைகள் எல்லாம் சௌகர்யமா" என்ற குசல விசாரிப்புகள். சற்று நேரத்தில் ஆச்சி வெளியே கொண்டுவரப்பட்டார். எண்ணெய் வைத்தல், சேலை போடுதல் போன்ற சம்பிரதாயங்கள். சுடுகாட்டுக்குக் கொண்டுசெல்ல வண்டியும் காத்திருந்தது. ஆச்சி தூக்கப்பட்டார். அந்த வண்டியின் பின்னே இரு சக்கர வாகனங்களில் பலரும் தொடர்ந்தோம்.

ஆச்சிக்கு முதலில் சர்க்கரை வியாதி மட்டும் தான் இருந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக தன உடன்பிறவா சகோதர வியாதிகளையும் அழைத்துவந்து நிரந்தரமாகக் குடியேறிவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஆச்சி படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் அனுமதிப்பதும் பின் உடல்நிலை தேறுவதும் எனக் கழிந்தது. சில நாட்களுக்கு முன் மிகவும் மோசமடைந்ததால் மதுரையிலுள்ள அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கே அந்த மருத்துவமனை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர்கள் நோயாளியின் உடலை சரியாகப் பரிசோதிக்கிறார்களோ இல்லையோ, உறவினர் எந்த அளவுக்குப் பசையுள்ளவர் என்பதை சரியாக பரிசோதித்துவிடுவார்கள். ஏழையானாலும் பணக்காரரானாலும் எந்த அளவுக்குப் பணம் புரட்ட முடியும் என்பதைக் கணிப்பதில் வல்லவர்கள்.

சித்தப்பாவைக் கூட நன்கு கணித்திருந்தார்கள். பத்து நாட்களில் நான்கு லட்சங்கள் செலவு. சேமிப்பை உடைத்தார், போதாதற்கு கொஞ்சம் கடனும் வாங்கினார். பத்தாவது நாள் ரமணா படத்தில் வருவதுபோல் ICU-விற்கு நர்ஸ்களும் டாக்டர்களும் பரபரப்பாக ஓடினார்கள். ஒரு மருந்துச் சீட்டைக் கொடுத்து அவசரமாக வாங்கி வரச் சொன்னார்கள். உள்ளிருந்து வெளியே வருவதும் ஏதாவது உபகரணங்களைக் கொண்டுசெல்வதுமாக ஒரு மணிநேரம் போக்கு காட்டியவர்கள் சித்தப்பாவிடம் ஆச்சி இறந்துவிட்டாதாகத் தெரிவித்தனர். சற்று நேரத்திலேயே டிஸ்சார்ஜ் சம்மரியுடன் பில்லையும் கொடுத்தனர். மேற்கொண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். இரவு ஒன்பது மணி. ATM-இல் பணம் எடுக்க முயன்றவருக்குப் பேரதிர்ச்சி. பணம் வரவில்லை. காலையில் தான் நாற்பதாயிரம் எடுத்திருந்தார். ATM கார்டை டெபிட் கார்டாகப் பயன்படுத்தும் வசதியை அவர் பெற்றிருக்கவில்லை. உறவினர் ஒருவருக்குப் போன் செய்து, அவர்கள் அங்கிருக்கும் நண்பர்களுக்குப் போன் செய்து பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டனர்.

சடங்குகள் அனைத்தும் முடிவதற்குள் மணி இரண்டைத் தாண்டிவிட்டது. முந்தைய நாள் இரவு புறப்பட்டதிலிருந்து எதுவும் சாப்பிடவுமில்லை, தூங்கவுமில்லை. வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் சென்னை செல்லத் தயாரானேன். அம்மா அப்பாவிடம் குடும்ப விஷயங்களைப் பேசுவதற்குக் கூட நேரமில்லை. மாலை தனியார் பேருந்தில் புறப்பட்டேன்.

மதுரையைக் கடந்ததும் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. பகல் அலைச்சல் நித்திரையில் ஆழ்த்தியது. "சரவணா, நல்லாருக்கியாய்யா? என்னைப் பாக்க வந்தியா? நான் தூங்கிட்டேனே" என்றார் ஆச்சி.

--------------------------------------------

அடுத்து வருவது: திருடா, திருடா