முந்தைய பகுதிகளைப் படிக்க

ஹோட்டல் ஹில்வியூவில் complimentary breakfast உண்டு என்பதால் அடுத்த நாள் காலை அங்கேயே சாப்பிட்டோம். ஹோட்டலின் முகப்பிலிருந்து நேர் கடைசியில் இருக்கிறது அவர்களது ரெஸ்டாரென்ட். காலை ஒன்பது மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதால் எட்டே முக்காலுக்கே ஆஜராகியிருந்தோம். வெளிநாட்டவரும் சில வட இந்திய குடும்பங்களும் மட்டுமே குழுமியிருந்தனர். வலதுபுறம் பாத்திரங்களில் சுடச்சுட பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதலில் கார்ன்ப்ளேக்ஸ்-உடன் பாலைக் கலந்து தொடங்கினோம். அடுத்து பிரெட், சென்னா, பட்டர் நான், என அடுத்தடுத்து சென்றது. கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் முட்டைகள் உருண்டுகொண்டிருக்க, அனைவரும் ஆளுக்கொன்றாய் அள்ளிக்கொண்டோம். 


உடன் வந்த நண்பர் ஒருவர் பிரெட்டுக்கு ஆம்லேட் தான் வேண்டும் என அடம்பிடிக்க, அங்கிருந்த வெயிட்டரிடம் ஐந்து பேருக்கும் ஆம்லேட் வேண்டும் என்று கேட்டோம், அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பெரிய தோசை சைசில் ஆம்லேட்களுடன் வந்தார். இதற்கு தனியாக பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. வெரைட்டிகள் குறைவுதான் என்றாலும் சுவையில் குறைவில்லை. முதலில் கார்ன் பிளேக்ஸ் பின் பிரெட் ஆம்லேட், பின் பட்டர் நான் என வெளுத்துக்கட்டினோம். முத்தாய்ப்பாக காபி. செம டேஸ்ட். இரண்டு கப் குடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நண்பர் கணேசனுடன்


எங்களுக்கு இரவு எட்டு மணிக்கு தேனியிலிருந்து பேருந்து என்பதால் செக் அவுட் செய்துவிட்டு பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துக்கொண்டே இறங்கிவிடலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மிக அருகில் ஒரு பார்க் இருக்கிறது. அங்கே போய் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு வரலாம் என்று ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டு லக்கேஜ்களை காரில் ஏற்றினோம்.

அந்த பார்க் பரந்து விரிந்திருந்தது. உள்ளே நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய் என்று ஞாபகம். காலை வேளை என்பதால் கூட்டம் அதிகமில்லை.

என்னுடைய கிளிக்

போகும் வழியில் பெரிய swimming pool. அங்கு வெளியே நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது பலூன் கேம் என்றார்கள். உடன் வந்த நண்பருக்கு அதன்மீது ஆசை வரவே அதில் ஏற்றினோம். மிகவும் சுவாரஸ்யமான அந்த விளையாட்டு பார்க்க வீடியோ
அடுத்ததாக வில் அம்பு விடுதல், basket ball போன்ற விளையாட்டுகளை சிறு குழந்தைகளாகி விளையாடி மகிழ்ந்தோம்.போகும் வழியில் மரங்களில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல்கள் கண்ணில் பட, அவற்றில் ஏறி நன்றாக ஆடினோம். ஆடும்போது மனம் லேசாகிப்போனது போன்ற உணர்வு.

உல்லாச ஊஞ்சல்

இங்கேயே சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்துவிட, போகும் வழியில் எங்காவது சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காகப் புறப்பட்டோம். இங்கு சிப்ஸ், சாக்லேட், முந்திரி பருப்பு, ஏலக்காய், தேயிலைப்பொடி போன்றவை மலிவாகக் கிடைக்கின்றன. இதற்கென்றே பிரத்யேகமாக பல கடைகள் இருக்கின்றன. மார்கெட்டிலிருக்கும் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு (சாப்பாடு சுமார் தான்) அவரவர்க்கு வேண்டிய பொருட்களை அங்கேயே வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.

நாளை: லாக்ஹோட் கேப், மைனா பாறை, செலவுகள் அத்துடன் முடிவு.