அலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து நெருங்கிய நண்பர்கள் மட்டும் புடைசூழ கேக் வெட்டுவது வழக்கம். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அன்றும் அதேபோல் தான் அரங்கேறியது. கடந்த மூன்று வருடங்களாக இதையே நாங்கள் செய்வதால் பிறந்தநாள் காண்பவருக்கு surprise என்பது இல்லாமலே போய்விட்டது. அதற்கு முன்னால் ஒரு விஷயம். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் எனக்குத்தான் முதல் பிறந்த நாள். ஏப்ரல் பதினேழு, அடுத்ததாக ஏப்ரல் இருபத்திரண்டு, மே ஏழு, ஒன்பது மற்றும் இருபத்தேழு. என்னுடைய பிறந்த நாளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை.  புது வருடம் தொடங்கி முதல் பிறந்த நாள் என்னுடையது என்பதாலோ என்னவோ. நானும் என் பிறந்த நாளன்று அதிகம் propoganda செய்வதில்லை. அதிலும் எனக்கு விருப்பமும் இல்லை. இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்களா என்று திட்டுகிறீர்களா? திட்டிக்கொள்ளுங்கள்.


இந்த வருடமும் எனது நண்பர்கள் வழக்கம்போல எனது பிறந்த நாளை மறந்திருந்தனர். பரவாயில்லை. ஏப்ரல் இருபத்திரெண்டாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பரை வழக்கம்போல் வெறும் கேக் வெட்டச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கேக் வெட்டப்போகிறோம் என்பதை அவர் எதிர்பார்த்திருப்பார். ஒரு surprise கொடுக்கலாம் என்றெண்ணி மற்ற நண்பர்கள் அனைவரும் கூடிப் பேசி நல்லதாக ஒரு டி-ஷர்ட் ஒன்றை எடுத்துக்கொடுத்தோம். பளபள பேப்பரில் அழகாக பேக் செய்து கொடுத்தோம். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக sms அனுப்பி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக மே ஏழாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பர். அவர் எங்களது உயரதிகாரிக்குச் செல்லப்பிள்ளை. ஆக, அவரது அறையிலேயே கேக் வெட்டி, அவரது கையாலேயே பரிசையும் கொடுக்கவைத்து அசத்திவிட்டோம். அதிமுக்கிய வேலையிலும் இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கிக்கொடுத்தார் எங்கள் மேலாளர். இதை எதையும் எதிர்பாராத அந்த பிறந்தநாள் குழந்தைக்கு வாயெல்லாம் பல்.
மே ஒன்பதாம் தேதி பிறந்த நாள் காணும் நண்பருக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். அதை மற்ற நண்பர்களிடமும் சொல்லியிருந்தேன். அவர் ஒரு நாள் என்னிடம் ஒரு விஷயத்தை உளறியிருந்தார். அதாவது போன வருடம் அவரது பிறந்த நாள் வந்தபோது அவரது மனைவி (அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை) ஏதோ ஸ்பெஷல் கொரியர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பியிருந்தார். காலை ஆறு மணிக்கே காலிங் பெல் அடித்த நபர் அதைக் கொடுத்துவிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவரது மனைவியிடமிருந்து போன். சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும் என்று என்னிடம் அன்றே சொல்லி சிலாகித்திருந்தார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், இந்த நண்பருக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறோம் என்று.

காலை ஆறரை மணிக்கே நானும் தரமணியிலிருக்கும் நண்பர் ஒருவரும் இவரது வீட்டுக் கதவைத் தட்டினோம். அப்போதுதான் அனைவரும் எழுந்திருந்தனர். கையேடு பூங்கொத்தையும் கொடுத்து கேக்கையும் வெட்டினோம். முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டியிருந்தார்கள். இது இரண்டாவது. சொன்னது போலவே மற்ற நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் போனில் வாழ்த்து சொல்ல, நண்பருக்கு குஷி. கூடுதல் சர்ப்ரைசாக அவரது அக்கா, தங்கை, அவர்களது குழந்தைகள் என ஒவ்வொருவராக ஆளுக்கொரு பரிசு தந்து அசத்தினர். கேக் சாப்பிட்டு, காபி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.

எப்போதும் அலுவலகத்துக்கு சாப்பாடு எடுத்துச் செல்வது வழக்கம். இன்று தரமணி நண்பருக்கும் சேர்த்து செய்யச்சொல்லியிருந்தேன். நங்கள் வீட்டுக்கு வரும்போது என் மனைவி அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள். அந்த நண்பரை நீ வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக்கொள் என்றா சொல்ல முடியும்? அதனால் காலை உணவாக எங்கள் இருவருக்கும் சுடச்சுட தோசையும், மதிய சாப்பாடும் செய்துதரச் சொல்லியிருந்தேன்.

நாங்கள் அலுவலகத்துக் கிளம்புகையில்  என் மனைவி என்னிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டாள். "நானும் எத்தனை வருஷமா கேட்டுக்கிட்டிருக்கேன், எனக்கும் சர்ப்ரைஸ்னா ரொம்பப் பிடிக்கும். எந்த பிறந்த நாளுக்காவது எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கீங்களா?" எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுதாரித்துக்கொண்டு சொன்னேன், "இந்த வருஷம் ஆகஸ்ட் மாசம் உன் பிறந்த நாள் வருதுல்ல, அப்போ சர்ப்ரைஸ் வரும். எதிர்பார்த்திரு".