தலைப்பைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் தலை கிறுகிறுத்து கீழே விழலாமா என யோசிக்கிறீங்களா? மேற்கொண்டு படியுங்கள்.


எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிகள் கற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழ் நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவும் தெரிந்திருந்து பத்தாம் வகுப்பு முடிந்தபோது ஒரு பக்கம் தட்டச்சும் மறுபுறம் இந்தியும் கற்றுக்கொண்டேன். டிப்ளமா சேர்ந்ததும் கூட இந்தி கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை. பிராத்மிக் தேர்வு எழுதி எண்பத்திரண்டு மதிப்பெண்கள் எடுத்தேன், அடுத்த படியான மத்யமா படிக்க ஆரம்பித்தேன். மத்யமா ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நிறுத்திவிட்டேன். காரணம் இருக்கிறது.

நான் படித்தது டிப்ளமா இன் கமெர்ஷியல் ப்ராக்டிஸ். சுருக்கமாக DCP. மூன்று வருடம் கோர்ஸ் - கிட்டத்தட்ட இளநிலை வணிகவியலுக்கு இணையான படிப்பு. பத்தாம் வகுப்பு முடித்ததும் சேர்ந்தேன், அதுவரை தமிழ் மீடியத்திலேயே படித்திருந்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினேன். பின் சுதாரித்துக்கொண்டேன். இந்தப் படிப்பில் ஒரே ஒரு பாடம் மட்டும் Elective. Banking மற்றும் Shorthand. வகுப்பு ஆரம்பித்த முதல் நாள் யார் எந்தப் பாடம் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அனைவரும் Shorthand என எழுதிக் கொடுத்துவிட்டோம். Banking படிப்பதற்கு ஆளில்லாததால் அடுத்த நாளே அந்தப் பாடம் நடத்தும் புரபொசர் எங்களிடம் Shorthand மிகவும் கடினமானது, தினமும் இரண்டு மணி நேரங்கள் ஒதுக்கவேண்டும், மற்ற பாடங்களைப் படிக்கமுடியாது என்று ஏதேதோ கூறி எங்களை மூளைச்சலவை செய்து கிட்டத்தட்ட பாதிப்பேரை பாடம் மாற்ற வைத்துவிட்டார்.அப்படி மாறியவர்களில் நானும் ஒருவன். ஹூம், இப்படி பாடம் மாறாமல் shorthand படித்த மாணவ மாணவியருக்கு அந்த நாளிலிருந்து கொஞ்சம் தலைக்கனம் ஒருபடி ஏறிக்கொண்டது.அவர்கள் எங்களிடம் பேசுகையில், "உங்களுக்கென்ன? படிச்சதை அப்படியே எழுதினா போதும், நாங்க அப்படியா?" என்று சொல்வார்கள். அதில் ஒரு ஏளனம் இருக்கும். அப்போது எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த ரோஷக்கார சரவணன் விழித்துக்கொள்ள நானும் படிக்கிறேண்டா shorthand என்று வெளியே தனியாகப் படித்தேன். காரணம் இவ்வளவுதான். டிப்ளமா முடிப்பதற்குள் intermediate வரை முடித்துவிட்டேன். அதன்பிறகு வேலைக்குச் சென்றுவிட்டதால் Higher-க்கு போதிய அளவுக்கு என்னால் பயிற்சி எடுக்க முடியவில்லை. அதனால் Higher எழுதியும் தேர்வாகவில்லை.

சரி, தலைப்புச் செய்திக்கு வருவோம். Nihon என்றால் ஜப்பான், go என்றால் மொழி, நிஹோங்கோ என்றால் ஜப்பான் மொழி என்று அர்த்தம். ஆம், நான் ஜப்பான் மொழி படிக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாகத் தான். சீன அல்லது ஜப்பான் மொழி படிப்பதற்கு எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த வழிகாட்டியும் இல்லாமல் எப்படிப் படிப்பது என்று அதைப்பற்றி நினைத்ததில்லை. மேலும் அலுவலக வேலைகள், குடும்பம் என பல Commitments!. என்னுடைய ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை ஜப்பான் மொழி படிப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பவர் பதிவர் அபயா அருணா அவர்கள். 

என்னை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கையூட்டி இந்த படிப்பில் சேர வைத்தவர், படிப்பதற்கு உதவுவதாகவும் சொல்லி எனக்குத் தெம்பூட்டியவர்.  தொலைபேசியில் அவ்வப்போது அழைத்து படிப்பு எப்படி இருக்கிறது எனக் கேட்டுக்கொள்கிறார். இவரது உதவி இல்லையென்றால் கண்டிப்பாக இந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருக்க மாட்டேன். இதுபோன்ற பல நல்ல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் நம் இணைய உலகத்துக்கும் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அவரது உதவியுடனும் உங்களது ஆசியுடனும் படிக்கத் தொடங்குகிறேன்.

நன்றி.