நான் எப்போதும் அலுவலகத்துக்கு என் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில்நிலையம் வரை மட்டுமே. ரயில்நிலையத்திலிருக்கும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து முண்டகக்கண்ணியம்மன் கோவில் வரை ரயில் பயணம். அங்கிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவே. ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிடலாம். ஏதாவது வெளிவேலை இருப்பின் வண்டியை எடுத்துச் செல்வதுண்டு. இப்படித்தான் கடந்த புதன்கிழமை ஒரு சொந்த வேலையாகவும் வியாழனன்று பதிவர் துளசிதரன் இயக்கிய குறும்படம் வெளியீடு இருந்ததாலும் வெள்ளியன்று தி.நகரில் ஒருவரை சந்திக்க இருந்ததாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் வண்டியிலேயே வரவேண்டியதாயிற்று. இப்படி தொடர்ச்சியாக வந்ததில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டேன்.


முதல் இரண்டு நாட்களும் வேலைகள் திட்டமிட்டபடி நடக்க, மூன்றாம் நாள் மாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய கனமழையால் அன்றைய நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் வசிப்போருக்குத் தெரிந்திருக்கும் - அன்றைய மழை எப்படிப்பட்டதென்று. வீட்டுக்கு எப்படிப் போவது? மழைக்கோட்டும் எடுத்து வரவில்லை. மழை நிற்பதற்கு வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் என்றே தோன்றியது. இப்போதுதான் அலுவலக நண்பர் இளங்கோவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், "வீடு வரைக்கும் ஜாலியா நனைஞ்சிட்டே போகலாமா சார்?"

இளங்கோவன் - சக அக்கவுண்டன்ட். தரமணியில் வசிப்பவர். நான் என்றெல்லாம் அலுவலகத்துக்கு வண்டியை எடுத்துவருகிறேனோ அன்று மாலை அவரது வீட்டில் இறக்கிவிட்டுச் செல்வதுண்டு. எனக்கு ஒரு கிலோமீட்டர் சுற்று தான். அவருக்கும் கொஞ்சம் அசௌகர்யம்தான். புறப்பட்ட நாற்பது நிமிடங்களில் அலுங்காமல் குலுங்காமல் வீடு செல்வதற்கும் மயிலாப்பூரிலிருந்து தரமணி வரை வாகன நெரிசலிலும் புகை மண்டலத்திலும் சிக்கி என் பின்னால் அமர்ந்து பயணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே. இதெல்லாம் ஏன், அவரவர் வழியில் போகவேண்டியதுதானே என்று கேட்கிறீர்களா? ஒத்த ரசனையுடைய இருவர் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் அந்த உணர்வுகளை அனுபவிக்க முடியும்.

அவர் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டதும் என் மனதில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. சிறுவயதில் எத்தனை முறை வேண்டுமென்றே மழையில் நனைந்து அம்மாவிடம் அடிவாங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் சிறு தூறலுக்குக்கூட எங்காவது ஒதுங்கிவிடுகிறேன். இதெல்லாம் என்ன சுதந்திரம் என்று நினைத்தவாறே "போகலாம்" என்றேன்.

முதல் வேலையாக பர்ஸ், போன் போன்றவற்றை வண்டியின் பெட்டியில் வைத்துப் பூட்டியாயிற்று. வண்டியைக் கிளப்பியபோது மழை இன்னும் அதிகமாகியிருந்தது. முழுதாய் நனையும் ஆர்வமிருந்தாலும் குடும்பஸ்தன் என்ற விழிப்புணர்வுடன் தலைக்கவசத்தை அணிந்துகொண்டேன்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அதிகக் கூட்டமில்லை. அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக அடையாறு, திருவான்மியூர், தரமணி. அங்கே அவரை இறக்கிவிட்டு வேளச்சேரி வழியாக வீடு செல்வதுதான் இலக்கு. அடையாறிலும் திருவான்மியூரிலும் நல்ல வாகன நெரிசல். அடையாராவது பரவாயில்லை, திருவான்மியூர் சிக்னலில் கூட்டம் சில சமயங்களில் இந்திரா நகர் ரயில்நிலையம் வரை நீள்வதுண்டு. அன்றும் அப்படித்தான். பொறுமையாகக் காத்திருந்து அசெண்டாஸ்-ஐத் தாண்டி இடதுபுறம் திரும்பினேன். தரமணி பஸ் நிலையத்தைக் கடந்து வலதுபுறம் திரும்பி சீராகச் சென்றுகொண்டிருந்த வண்டி திக்கித் திணறி நின்றுபோனது. அப்போதுதான் நான் கவனிக்கத் தவறிய விஷயம் உறைத்தது. மூன்று நாட்களாக வண்டி ரிசர்வில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல் காலி. இளங்கோவின் வீடு வரை வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினேன்.

எங்களுக்கு இப்போதைய தேவை கொஞ்சம் பெட்ரோல். ஆனால் அதை வாங்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்று பார்த்தால் மிகக்கடினம் என்றே சொல்லவேண்டும். காரணம் பக்கத்தில் பெட்ரோல் பங்க் என்பது வேளச்சேரிக்கு முன்னால்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும். ஒரு ஆட்டோ பிடித்துப் போய்விடலாம் என்றால் ஆட்டோ பிடிப்பதற்கு ஒரு கிலோமீட்டர் நடக்கவேண்டும். இளங்கோவுடன் தங்கியிருக்கும் தோழரும் வருவதற்கு தாமதமாகும் என்று கூறிவிட்டார்.

அருகிலிருக்கும் மெக்கானிக் கடையில் கொஞ்சம் பெட்ரோல் வாங்கிக்கொள்ளலாம் என்று கையில் ஒரு லிட்டர் தண்ணீர் கேனுடன் கடை நோக்கி கிளம்பினோம். ஏற்கனவே மழையாலும் தெறித்த தண்ணீராலும் ஷூவுக்குள் பூகம்பம் நிகழ்ந்திருக்க, நாங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் புஸ் புஸ் என்று தண்ணீர் வெளியே கொட்டியது. நாங்கள் சென்ற நேரம் மெக்கானிக் கடை பூட்டியிருக்க, நடந்தே சென்று ஆட்டோ பிடித்து வாங்கிவருகிறேன் என்றேன். நண்பரோ என்னை வேகவேகமாக ஒரு மளிகைக் கடைக்கு அழைத்துச் சென்றார். "நான் ரெகுலரா மளிகை சாமான் இங்கதான் வாங்குவேன். இவருக்கு யாரையாவது தெரியுமா பாப்போம்" என்றார். அந்தக் கடைக்காரரோ "தெரியாது" என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டார். அவர் சொன்ன "தெரியாது" என்ற வார்த்தையில் "யாவாரத்தைக் கெடுக்காம முதல்ல கிளம்பு" என்ற அர்த்தம் பொதிந்திருந்தது. அப்போதுதான் எதிர்திசையிலிருந்து "தம்பீ, இங்க வாங்க" என்ற சப்தம் கேட்டது.

அழைத்தவர் எதிர்கடைக்காரர். சில நாட்களுக்கு முன்புவரை நண்பர் இவரிடமிருந்துதான் தண்ணீர் கேன் வாங்கிக்கொண்டிருந்தார். குறித்த நேரத்துக்கு தண்ணீர் தராததால் இவரிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டார். "என்ன பிரச்சனை தம்பி" என்றார். "வண்டில பெட்ரோல் காலியாயிருச்சு, அதான்" என்றேன். "அதுக்கென்ன, என் வண்டியை எடுத்துட்டுப் போங்க" என்று கூறி சாவியைக் கொடுத்தார். கடைக்கு வெளியே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆக்டிவா எங்களுக்கு மயில்வாகனமாகத் தெரிந்தது.

உடனடியாகக் கிளம்பி சந்து பொந்துக்களில் புகுந்து மெயின் ரோட்டை அடைந்து டிசிஎஸ் கடந்தவுடன் இடதுபுறம் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் எழுபது ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிக்கொண்டோம். தானமாக வந்த மாட்டை பல்லைப்பிடித்துப் பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அவர் கொடுத்த வண்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பின்சக்கர பிரேக் முற்றிலும் செயலிழந்திருக்க முன்சக்கர பிரேக் நல்ல நிலையில் இருந்தது. ஒருவழியாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு வந்து வண்டியை அவரிடம் திருப்பிக் கொடுத்தோம். எனக்கு இப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. கேனிலிருந்த பெட்ரோலை ஊற்றி வண்டியை ஸ்டார்ட் செய்ததும் முதலில் திணறிய எஞ்சின் தனக்கான உணவை முழுவதும் உள்வாங்கிக்கொண்டதும் சீராக ஓட ஆரம்பித்தது. மழை இப்போது முன்னிலும் அதிகமாகப் பெய்ய ஆரம்பிக்க, இளங்கோவன் என்னிடம் தன் வீட்டிலேயே இருந்துவிட்டு மழை வெறித்ததும் போகலாம் என்றார். "முழுக்க நனைஞ்சாச்சு, முக்காடு எதுக்கு" என்று கூறி உடனே கிளம்பினேன். வரும் வழியில் அந்த மளிகைக் கடையில் அவர் அமர்ந்திருந்தார். வெளியே சற்றுமுன் நான் நிறுத்தியிருந்த அவரது ஆக்டிவா நின்றிருந்தது. ஒரு நன்றிகூட சொல்லவில்லையே என்ற எண்ணத்தில் என் வண்டியை நிறுத்திவிட்டு அவரது கடைக்குச் சென்றோம். தலை தவிர முழுவதும் நனைந்திருந்த என்னைப் பார்த்தவர், "அடடா, மழை நின்னதுக்கப்புறம் போகவேண்டியது தானே, உள்ள வாங்க, துவட்டிக்கிறீங்களா" என்று அவரது துண்டை எடுத்துக் கொடுத்தார்.

"உங்களை மாதிரி நல்லவங்க ஒரு சிலர் இருக்கிறதாலதான் இந்த மாதிரி மழை பெய்யுது. ரொம்ப தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

-ஔவையார்