டியர் எம்.டி.எஸ்.,

சமீபகாலமாக உனக்கு என்னவோ ஆகிவிட்டது. சில நாட்களாகவே இணையத்தில் இணைய மறுக்கிறாய். அப்படியே இணைந்தாலும் உலாவியில் வேகம் காட்டுவதில்லை. உன்னை நான் விலைகொடுத்து வாங்கியபோது உன்மீது எனக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன் உன் சகோதரனுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இனி இந்த நிறுவனத்தின் வசதியை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் புதுப்பொலிவுடன் ஆயிரம் ரூபாய்க்கு நாற்பது ஜிகாபைட் மற்றும் ஒன்பது புள்ளி எட்டு மெகாபைட் வேகம் என்று கூறி என்னைக் கிளர்ச்சியுறச் செய்தார் உன் நிறுவனத்தில் வேலை செய்யும் விற்பனை அதிகாரி. இருந்தும் நம்பிக்கையற்றவனாய் அவரைப் புறக்கணித்தேன். அலுவலக நண்பர் ஒருவர் உன்னுடைய சகோதரர் ஒருவரை வாங்கியிருப்பதாகவும் இதுவரை கண்டிராத இணைய வேகமும் இணையும் வேகமும் இருப்பதாய்க் கூற, இருந்தும் மனமில்லாமல் உன்னைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டே வாங்குவது என முடிவு செய்து அந்த நண்பரிடமிருந்தே உன் சகோதரரைப் பெற்று அவர் மூலம் என்னுடைய கணினியிலும் வயர் இல்லாத இணைப்பாக மடிக்கணினி மற்றும் அலைபேசிகளிலும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு உன் அபாரத் திறமையையும் வேகத்தையும் எண்ணி வியந்தேன்.
அடுத்த நாளே அதே அதிகாரியை அழைத்து ஆயிரம் ரூபாய் விலைகொடுத்து உன்னை வாங்கினேன். என் சொந்தமே சொந்தமான நீ அதற்கடுத்த நாளிலிருந்து உன் வேகத்தில் என்னை மகிழ்ச்சியுறச் செய்தாய். எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு வெறும் ஐந்து ஜிகாபைட் மட்டுமே வழங்கிவந்த பழைய இணைய இணைப்பான ஏர்டெல்லை அடுத்த பில் தேதியுடன் துண்டித்துவிட்டேன். அப்புறமென்ன? அலைபேசி சார்ஜரில் உனக்கு மின்சாரம் மட்டும் வழங்கி மடிக்கணினியில் படங்களும் பாடல்களும் தரவிறக்கம் செய்யும்போதே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தொலைபேசி பார்த்துக்கொண்டு என்னுடைய கைபேசியில் முகநூலை மேய்ந்துகொண்டிருந்தேனே! அப்படி ஒரு ஆனந்தத்தை வழங்கினாய்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று சொல்வார்களே! எனக்கு இணையத்தின் மீதான ஆசை எத்தனை வருடங்கள் ஆனாலும் குறையப் போவதில்லை. ஆனால் ஆறே மாதத்தில் உன் வேகம் குறைந்ததின் ரகசியம் என்ன? தரவிறக்கம் செய்யும்போது வெறும் இருபது, முப்பது கிலோபைட் வேகம் மட்டுமே தருவதன் காரணம் என்ன? எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் உலாவியில் சக பதிவர்களின் பதிவுகளைப் படித்துவிடுபவன் நான். ஆனால் படித்துவிட்டு கருத்தைப் பதியும்போது தான் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மீண்டும் இணைப்பு கொடுத்தாலும் கிடைப்பதில்லை. உன்னை கணினியிலிருந்து மொத்தமாகத் துண்டித்து மீண்டும் இணைக்கையில் இணைந்துகொள்கிறாய். 

ஆரம்பத்தில் என் கணினியில் தான் பிரச்சனை என்று எண்ணியிருந்தேன். கணினியில் நிறுவப்பட்டிருந்த உனக்கான மென்பொருளை நீக்கிவிட்டு மீண்டும் நிறுவிப்பார்த்தேன். சரியாகவில்லை. இயக்குதளத்தையே நீக்கிவிட்டு புதிதாக நிறுவினேன். இரண்டு மணி நேரங்களை வீணடித்தது மட்டுமே எஞ்சியிருந்தது. மடிக்கணினியில் உன்னை செருகி ஜன்னலுக்கு மிக அருகே அமர்ந்து பணிசெய்து பார்த்தேன். கல்லுளிமங்கனாவது பதில் ஏதும் சொல்லாவிட்டாலும் முகத்தில் ஏதாவது எதிர்வினை காட்டுவான். ஆனால் நீ எதுவும் காட்டாதது ஏன்? உன்னை ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு வயரில் 

இணைத்து மடிக்கணினியில் செருகி ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டுப் பார்த்தேன். தூக்கில் தொங்குபவன் கூட சில நொடிகளுக்காவது துடிப்பான். ஆனால் உன் நாடித்துடிப்பைக் கொஞ்சம் கூட உணரமுடியவில்லையே என்னால்! மடிக்கணினியை எடுத்துக்கொண்டு மொட்டைமாடியில் கூட அமர்ந்து பார்த்துவிட்டேன். இணைப்பு கிடைக்கவில்லை. மொட்டை மாடிக்கும் மேல் தண்ணீர்த்தொட்டி இருக்கிறது. ஆனால் அதற்கு சாதாரண தகர மூடி கொண்டுதான் மூடியிருக்கிறார்கள். அந்த மூடி என் எடையைத் தாங்கும் அளவுக்கு இருந்திருந்தால் அங்கும் ஏறி உன்னை சோதித்துப் பார்த்திருப்பேன்.

இணைய இணைப்புக்கே இவ்வளவு திண்டாட்டம் என்றால் காணொளி பார்ப்பது என்பது மிக மிகக் கொடுமையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. முந்தைய ஏர்டெல்லில் ஐந்து நிமிடங்கள் கொண்ட ஒரு காணொளியைக் காண்பதென்றால் ஒரு நிமிடம் கடப்பதற்குள் முழுக் காணொளியும் மெமரிக்கு வந்துவிடும். அடுத்த நிமிடங்களில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் முழுதும் காணமுடியும். உன்னை விற்க வந்த அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா? எம்.டி.எஸ்.இல் அப்படிக் கிடையாது, காணொளியின் பத்து சதவீதம் முன்னராகத் தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும். ஆனால் நடுவில் நிற்காது. நமக்கு அந்தக் காணொளி பிடிக்கவில்லை என்றால் நிறுத்திக்கொள்ளலாம். அதுவரை இழுக்கப்பட்ட தரவு மட்டுமே பறிபோகும். ஆனால் ஏர்டெல்லில் மூன்று நிமிடங்களுக்குள் முப்பது நிமிட காணொளி கணினிக்கு வந்துவிடும். நமக்குப் பிடிக்கவில்லை என்று அந்தக் காணொளியை நிறுத்திக்கொண்டாலும் முழுக்காணொளிக்கான தரவும் பறிபோகும், இதனால் தான் ஏர்டெல்லில் நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அதிகப்படியான தரவை இழக்கிறீர்கள் என்றார். அவர் சொன்ன இந்த தர்க்க ரீதியான விஷயம் ஏர்டெல் மீது எனக்கு அவநம்பிக்கையையும் உன்மீது பெரும் நன்மதிப்பையும் பெற்றுத்தந்தது. ஆனால் அவர் சொன்னதை வேறுவிதமாக இப்போதுதான் உணர்கிறேன். இணையம் துண்டிக்கப்பட்டாலும் ஏர்டெல்லில் காணொளிகள் எந்த விதமான தடங்கலின்றி வந்துகொண்டே இருக்கும். ஆனால் உன்னிடம் வேகம் சிறிதளவு குறைந்தாலும் காணொளி நின்றுவிடுகிறதே!

கடந்த மாதம் நான் அதிக அளவில் தரவிறக்கம் ஏதும் செய்யாதபோதும் எனக்குக் கொடுக்கப்பட்ட மொத்த அளவான நாற்பது ஜிகாபைட்டுகளையும் பயன்படுத்திவிட்டதாகவும் அதனால் இணைய வேகம் குறைக்கப்பட்டதாகவும் கூறினாயே! நான் நாற்பது ஜிகாபைட்டுகள் பயன்படுத்தியதற்கு என்ன ஆதாரத்தைக் காட்டுவாய்? இவ்வளவு ஏன், உன்னிடம் நான் இதுவரை எவ்வளவு தரவு பயன்படுத்தியிருக்கிறேன் என்பதற்கு ஏதேனும் அளவுகோல் ஏதும் உள்ளதா? போகட்டும், அதற்கு மேற்கொண்டு இதே வேகத்தில் இணைப்பு வேண்டுமென்றால் நூற்றி இருபத்தைந்து ரூபாய் கொடுத்து மூன்று ஜிகாபைட்டுகள் வாங்கிக்கொள் வாங்கிக்கொள் என்று என்னை இணையத்தின் இடையிடையே தொந்தரவு செய்தாயே! அப்படியே வாங்கினாலும் நீ பழைய இணைய வேகத்தைத் தர மறுப்பது ஏன்?

ஏர்டெல் இணையத்தைத் துண்டித்தபோது வாடிக்கை சேவை மைய அதிகாரி துடிதுடித்துப்போனார். தயவு செய்து துண்டிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். எனக்கு வேண்டுமானால் அதை ப்ரீபெய்ட் இணைப்பாக மாற்றித் தருகிறேன் என்றார். சும்மா வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு எந்த பில் தொகையும் வராது, நீங்கள் பயன்படுத்தத் தொடங்கும் காலத்தில் பில்லையும் தொடங்கிக்கொள்ளலாம் என்றெல்லாம் என்னென்னவோ சலுகைகளை அளித்துப் பார்த்தார். நான் கொஞ்சம் கூட மசியவில்லை. அவர் அழாத குறையாக எனக்கு குட்பை சொன்னபோது என் இதழோரத்தில் ஒரு புன்னகை. இப்போது உன் வேகம் குறைந்தபோது அதைப் பயன்படுத்தலாம் என்றால் அவரிடம் பேசிய கையேடு சிம் அட்டையை ஒடித்து குப்பையில் எறிந்தது ஞாபகத்துக்கு வருகிறது. நல்லவேளையாக என்னிடம் ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது தேவைக்கேற்ப பணத்தை செலுத்தி இணையத்தில் இணைந்துகொள்கிறேன்.

கடந்தமுறை உன் பழைய பதிப்பான மூன்று புள்ளி ஒன்று மெகாபைட் வேகத்தைப் பயன்படுத்தியபோது பல பிரச்சனைகள் வந்தன என்பது உனக்கே தெரியும். இருந்தாலும் அதை சரிசெய்ய வாடிக்கை சேவை மைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டும் மின்னஞ்சல் அனுப்பியும் ஆட்களை வரவழைத்து பல முறை முயன்றும் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை. ஆனால் இந்த முறை அப்படியல்ல. என்னுடைய பில் சுற்று முடியும் பதினைந்தாம் தேதியுடன் உன்னுடனான இந்த பந்தத்தை முறித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். பில் வந்ததும் நாளுக்கு ஒருமுறை உன் நிறுவனத்திலிருந்து ஒருவர் கைபேசியில் அழைத்து பணத்தை எப்போது கட்டுவீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த மாதம் கடுப்பாகிப்போன நான் இதுவரை எப்போதாவது நான் தாமதமாகக் கட்டியிருக்கிறேனா? அப்படிக் கட்டியிருந்தால் என்னுடன் பேசுங்கள் என்று அந்த பெண் அதிகாரியிடம் கடிந்துகொண்டேன். போகட்டும், இணைப்பு துண்டிப்பது துண்டிப்பது தான். இதற்காக உன் நிறுவனத்தின் எத்தனை அதிகாரிகள் வந்து என்னிடம் கதறினாலும் நான் கேட்கப்போவதில்லை.

குட்பை எம்.டி.எஸ்.