அவர் பெயர் பாஸ்கரன். போன வாரம் வரை எதிர் வீட்டுக்காரர். ஐம்பது லட்சத்துக்கு வீட்டை விற்றுவிட்டார். வங்கிக்கடனை அடைக்க முடியவில்லை. வீட்டை விற்று வந்த பணத்தில் வங்கியின் நிலுவைத்தொகை முழுவதும் வட்டியுடன் கட்டிவிட்டார். இப்போது மடிப்பாக்கத்தில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகைக்கு வேறு வீடு பார்த்து சென்றுவிட்டார்.


கடனை அடைக்க முடியாததன் காரணம் என்ன? அவர் சொந்தமாக ஒரு டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். வெளியூர் வெளிநாடுகளுக்கான விமான டிக்கட் முன்பதிவு செய்துகொடுப்பது தான் வேலை. அரசாங்கத்தின் பல பெரிய அதிகாரிகள் அவரிடம் வாடிக்கையாளராக இருந்தனர். நல்ல வருமான வந்துகொண்டிருந்தது. கடந்த காங்கிரஸ் அரசின் இறுதியில் ஏதோ அரசாணை பிறப்பித்துவிட்டார்களாம். அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் தான் டிக்கட்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று. என்னிடம் இதை அவர் சொல்லும்போது அவர் இருந்த மனநிலையில் எப்படி என்னவென்று அவரிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.

இதனால் பெருமளவு வாடிக்கையாளர்கள் அவரிடமிருந்து விலக, திடீரென்று வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது. மாதம் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை வந்துகொண்டிருந்தது இப்போது வெறும் ஐயாயிரம் பத்தாயிரம் என்று குறைந்துவிட்டது. டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். அவருக்கு மனைவி ஒரு மகன் மட்டுமே.

அவர் ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடியவர். வீடு முழுவதும் ஏ.சி., நாற்பது அங்குல டிவி, தினமும் ஹோட்டல் சாப்பாடு, குடும்பத்துடன் வெளிநாடு பயணம் என செலவு செய்பவர். தன் மகன் பெரிய கார் வேண்டும் என்று கேட்டதற்காக பழைய சிறிய காரை சொற்ப விலைக்கு விற்றுவிட்டு நல்ல விலைக்கு பெரிய கார் ஒன்றை வாங்கினார். பெட்ரோலுக்கும் மின்சாரத்துக்கும் மட்டும் அவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

யார் எப்படி செலவு செய்தால் உனக்கென்ன? அடுத்த வீட்டுக் கதை உனக்கெதற்கு என்கிறீர்களா? இந்த நிலையில் தான் நானும் இருந்தேன். வீட்டைக் காலி செய்து சென்றபின் விட்டுப்போன பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ஒரு நாள் அவர் வந்திருந்தார். வெளியே இருக்கும் பெயர்ப்பலகையை ஸ்க்ரூடிரைவாரால் அகற்றும்போது அவரையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் சிந்திவிட்டன. இதை நான் கவனித்துவிட்டேன். நான் கவனித்ததை கவனித்த அவர், "நாலு வருஷமா இருந்த வீட்டைவிட்டுப் போறதுக்கு மனசு கஷ்டமா இருக்கு" என்றார். அடிக்கடி வீட்டுக்கு வாங்க என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

அவர் செய்த பெரிய தவறு - வருமானம் நல்லபடியாக வரும்போதே வங்கிக்கடனை அடைத்திருக்க வேண்டும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த அளவு பணத்தைக் கட்டியிருக்கலாம். இதனால் பின்னாளில் கட்ட வேண்டிய அசலும் வட்டியும் குறைந்திருக்கும்.

நல்ல விதத்தில் முதலீடுகள் ஏதாவது செய்திருக்க வேண்டும். தங்கம், வேறு ஏதாவது அசையா சொத்துக்கள், பத்திரங்கள், வைப்பு நிதி என எதிலாவது முதலீடு செய்திருந்தால் சொத்து மதிப்பும் கூடும், வீடு விற்கவேண்டிய சூழ்நிலை வரும்போது எதையாவது உடைத்து மீட்டிருக்கலாம்.

உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். வரும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு செமிப்புக்கேன்று ஒதுக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியாக சம்பளத்தில் பன்னிரண்டு சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்துகொள்வார்கள். உதாரணமாக ஒருவருக்கு சம்பளம் பத்தாயிரம் ரூபாய் என்றால் அதில் பன்னிரண்டு சதவீதம் - ஆயிரத்து இருநூறு ரூபாயை - மாதா மாதம் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள். காலாண்டுக்கு ஒரு முறை அதற்கு வட்டியும் கணக்கிட்டு அதையும் நிதியிலேயே சேர்த்துக்கொள்வார்கள். இதே பன்னிரண்டு சதவீதத்தை நாம் பணிபுரியும் நிறுவனமும் நம் கணக்கில் வரவு வைக்கும். வட்டிக்கு வட்டி, நாம் சேமிக்கும் அசலுக்கும் வட்டி, நிறுவனம் தரும் தொகைக்கும் வட்டி என அது ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே செல்லும். பணி ஒய்வு பெறும்பொது மொத்தமாக ஒரு தொகை வந்து சேரும். இது நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு என அரசு பி.பி.எப். எனப்படும் இதேபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்திவருகிறது என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. முன்பெல்லாம் தபால் அலுவலகத்தில் இதற்கென ஒரு கணக்கு துவங்கவேண்டும். இப்போது சில வங்கிகளிலும் வந்துவிட்டது. வருடத்துக்கு ஒரு முறையாவது பணம் செலுத்தவேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியே இதற்கும். ஒரே பிரச்சனை - பதினைந்து வருடங்களுக்கு இதில் சேமிக்கும் பணத்தை எடுக்கமுடியாது. ஆனால் கடன் பெறலாம். இதிலாவது அவர் முதலீடு செய்திருக்கலாம்.


வருங்கால வைப்பு நிதி என்றதும் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. நிறுவனங்களில் பணி புரிபவர்கள் குறைந்த பட்சம் பன்னிரண்டு சதவீதம் இதில் கட்டாயம் முதலீடு செய்தாக வேண்டும். அதிகபட்சம் முப்பத்தாறு சதவீதம் வரை முதலீடு செய்யலாம். அதாவது கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் நம் விருப்பப்படி முதலீடு செய்துகொள்ளலாம். சமீபத்தில்தான் நான் இதைத் தெரிந்துகொண்டு கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் பிடித்தம் செய்யும்படி மாற்றிக்கொண்டேன். இப்போது வருமானத்தில் குறைந்தாலும் பிற்காலத்தில் உதவும் தானே. அதேபோல் எல்.ஐ.சி.க்கு தனியாகத்தான் பணம் கட்டிக்கொண்டிருந்தேன். அதையும் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளும்படி செய்துவிட்டேன். வருமானம் இன்னும் குறையும். போகட்டும். மூன்று மாதம் ஆறு மாதத்துக்கு பெரிய தொகையாகக் கட்டுவதை விட மாதாமாதம் சிறு சிறு தொகையாகக் கட்டுவது எவ்வளவோ மேல். மேலும் இவ்வளவு தான் வருமானம் என்று நாமும் அதற்கேற்றவாறு வளைந்து செல்வோம்.

நல்லவேளையாக அவருக்கு பெரிய அளவில் மருத்துவ செலவு எதுவும் வரவில்லை. வந்திருந்தால் இன்னும் முன்னரே இந்த நிலைமை வந்திருக்கும். அவர் மெடிகிளைம் போன்றவற்றை அறிந்தவர் போலத் தெரியவில்லை.

நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானது தான். பார்த்து பார்த்து செலவு செய்யவேண்டும். அவரைப் பொறுத்தவரை செலவு செய்து பெற்றுக்கொண்ட படிப்பினை, எனக்கோ இது ஒரு இலவசப் பாடம். பெயர்ப் பலகையை அகற்றும்போது அனிச்சையாக அவர் சிந்திய கண்ணீர்த்துளிகள் என்னை இன்னும் சூதானமா இருந்துக்கோ சரவணா என்று சொல்கிறது.