எனக்கென்று கல்லூரிக் காலம் என்று தனியாக எதுவும் இல்லை. 1994-97ஆம் ஆண்டுகளில் டிப்ளமா படித்தேன். அதன் பின்னர் வேலை செய்துகொண்டே பி.காம். படித்தேன். டிப்ளமா படித்த அந்த மூன்று ஆண்டுகள் பள்ளியும் அல்லாத கல்லூரியும் அல்லாத ஒரு இடைப்பட்ட நிலையிலேயே கடந்துவிட்டது. கமெர்ஷியல் பிராக்டிஸ். பி.காம் படிப்புக்கான அத்தனை பாடங்களும் இதில் அடக்கம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பி.காம். படிக்க வேண்டிய நிலை வந்தால் எப்படி இருக்கும்? முதல் வருடம் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் அடுத்த வருடங்களில் சுதாரித்துவிட்டேன். பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது டிஸ்டிங்ஷன். விஷயம் அதுவல்ல.


எங்கள் வகுப்பில் மொத்தம் முப்பத்து நான்கு பேர். அதில் ஆண்கள் பதிமூன்று பேர் மற்றும் பெண்கள் இருபத்தோரு பேர். டிப்ளமா முடித்து அஞ்சல் வழியில் பி.காம் படிக்கும்வரை கிட்டத்தட்ட அனைவருமே தொடர்பில் இருந்திருந்தோம். பின்னர் பலருக்கு திருமணம் ஆனது, பலர் வேலை கிடைத்து வெளியூர் சென்றார்கள். கால ஓட்டத்தில் தொடர்பு பெருமளவில் குறைந்துபோனது. ஆனால் ஒவ்வொருவரும் யாராவது ஓரிருவருடன் தொடர்பில் இருந்துகொண்டே இருந்தார்கள். சமீபத்தில் எங்கள் கல்லூரியில் எங்களுக்கும் முன்னர் படித்தவர்கள் ஒன்றுகூடியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூடவே நாங்கள் முப்பத்து நான்கு பேரும் இணைந்து ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்ற எண்ணத்தையும் விதைத்தது.


ஆண்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் பிடித்தாகி விட்டது. பலர் சென்னையிலும் மீதிப்பேர் ஊரிலும் இருக்கிறார்கள். பெண்களில் பலரை கஷ்டப்பட்டுத்தான் பிடிக்க முடிந்தது. இருந்தும் சிலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சில நாட்களில் கண்டுபிடித்துவிடுவோம்.


மீனாட்சி. பிரில்லியன்ட் என்பதற்கு ஒரு படி மேலான வார்த்தை ஏதும் இருந்தால் சொல்லுங்கள். அவ்வளவு பிரில்லியன்ட். நன்றாகப் படிப்பாள். இரண்டு செமஸ்டர்களில் முதல் மாணவியாக வந்தாள். டிப்ளமா முடித்த கையோடு சி.ஏ. படிக்கத் தொடங்கினாள். கூடவே பி.காம்., பின்னர் எம்.காம். எம்.காம். முடிப்பதற்குள் சி.ஏ. முடித்துவிட்டாள். முடித்து நான் பணிபுரியும் நிறுவனத்தின் சகோதர நிறுவனத்தில் வேலை செய்கிறாள். இதெல்லாம் சில வருடங்களுக்கு முன்னர் இன்னொரு நண்பர் தனது திருமண அழைப்பிதழை ஊரிலுள்ள அவளுடைய வீட்டில் கொடுக்கச் சென்றபோது அவளுடைய அம்மா தந்த தகவல்கள். நாங்கள் முப்பத்து நான்கு பேரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியைத் தொடங்கியபோது மீனாட்சியைக் கண்டுபிடிக்கும் வேலை எனக்கு வழங்கப்பட்டது.


அவள் பணிபுரியும் நிறுவனம் சுமார் இரண்டாயிரம் பேர் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனம். இதுவே என்னை மலைக்கச் செய்தது. ஆனால் அங்கு பணிபுரியும் - அலுவலக விஷயமாக என்னுடன் தொடர்பிலிருப்பவர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்குத் தெரியவில்லை. பரவாயில்லை. நேரடியாக அந்த நிறுவனத்துக்கே தொலைபேசியில் தொடர்புகொண்டேன். "எம்.மீனாட்சி, சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்" என்றேன், "எக்ஸ்டன்ஷன்?" என்றார்கள். "எனக்குத் தெரிந்தது அவள் பெயர் மீனாட்சி, சி.ஏ. அவ்வளவுதான்" என்றேன். நான்கைந்து மீனாட்சிகளிடம் பேசி ஒரு வழியாகப் பிடித்துவிட்டேன். 


அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சட்டென்று என்னைப் புரிந்துகொண்டாள். பலரையும் நலம் விசாரித்தாள். துரதிர்ஷ்டவசமாக அவள் எங்கள் உடன் படித்த யாரிடமும் தொடர்பிலில்லை. எனக்குத் தெரிந்தவர்களின் அலைபேசி எண், முகநூல் ஐடி போன்றவற்றைக் கொடுத்தேன். அவளுடைய அலைபேசி எண்ணையும் தந்தாள். வீடு எங்கே என்றேன். மடிப்பாக்கம் என்றாள். இவ்வளவு பக்கத்தில் இருக்கிறோம் இத்தனை வருடங்களாகத் தெரியாமல் போயிற்றே என்ற வருத்தம். கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்றிருக்கிறேன், அவளும் என்னை வரச்சொல்லியிருந்தாள். இப்போது அவள் எங்களால் தன் உடன்படித்த மற்றவர்களுடன் தொலைபேசி, முகநூல் மூலாமாகத் தொடர்பில் இருக்கிறாள்.


கடந்த தீபாவளி தினத்தன்று அவளுடைய வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றேன். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. கணவர் நல்ல மனிதர், இவன் எதுக்கு இங்கெல்லாம் வர்றான் என்கிற மாதிரியெல்லாம் இல்லாமல் நன்றாகப் பேசினார். காதல் திருமணமாம். மீனாட்சி என்னிடம் அதைச் சொன்னது வித்தியாசமாக இருந்தது. "நானும் இவரும் எம்.காம். கிளாஸ்மேட்ஸ்" என்றாள். என் மரமண்டைக்கு அப்போது உறைக்கவில்லை. மீண்டும் "நானும் இவரும் எம்.காம். கிளாஸ்மேட்ஸ்" என்றாள். "ஓ, சரி சரி" என்றேனே தவிர எனக்கேதும் புரியவில்லை. என் மனைவி, "லவ் மேரேஜா?" என்று கேட்கவும் தான் நான் புரிந்துகொண்டேன். முதலில் அவளுடைய வீட்டில் எதிர்த்தார்களாம். பின்னர் சமாதானம் ஆகிவிட்டார்களாம். இரண்டு குழந்தைகள். ஆயிரத்து இருநூறு சதுர அடியில் வீடு வாங்கியிருக்கிறார்கள். வீட்டின் பின்னால் சிறு தோட்டம், வாழை, தக்காளி மற்றும் சில கொடிகள் வளர்கின்றன. மதியம் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். 


இதை நான் இங்கே எதற்காக சொல்கிறேன். தெரியவில்லை. சந்தோஷமான நிகழ்வு. முப்பத்து நான்கு பேரை ஒருங்கிணைக்கும் பணியில் எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கிடைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த ஊரிலிருந்தும் தொடர்பிலில்லாத ஒருவருக்கொருவர் தற்போது அங்கேயே சிறு சிறு சந்திப்புகள் நடத்தி முகநூலில் படங்களைப் பகிர்கிறார்கள். நான் அவ்வப்போது யாருடனாவது பேசுவதுண்டு.


இன்னும் ஒருசிலர் தான். அடுத்த கோடை விடுமுறையில் ஒரு மெகா சந்திப்பு நடத்தலாம் என்றிருக்கிறோம். தற்போது தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் இதில் சம்மதம். அதற்குள் விட்டுப்போன மற்றவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.