கலர் பென்சில் 28.08.2015

வலைப்பதிவர் திருவிழா

இந்த வருடத்தின் வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் இனிதே நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டையில் ஏராளமான பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் திருவிழாவின்போது தான் தெரியும். நானும் கலந்துகொள்ள இருக்கிறேன். வருகைப் பதிவேட்டில் என் பெயரையும் எழுதிவிட்டேன்.

தழும்பு

இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அவன் தனது வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்திருந்த சமயம் அது. அவனது அம்மா ஒரு நாள் அவனை அழைத்து உனக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். திருமணம் பற்றியும் மணவாழ்க்கை பற்றியும் அதிகம் அறிந்திருந்தாலும் அனுபவப்பட்டிராத அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி இருந்தாலும் அன்றைய வயதையும் பணி நிலையையும் கருத்தில் கொண்டு இப்ப என்னம்மா அவசரம் என்று தன் தாயிடம் கூற, அவரோ அதை வழக்கமாக எல்லா வயசுப்பையன்களும் சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.