இதன்  முன்பகுதி. தொடரும்  கதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் நினைத்தால் நடப்பது வேறொன்றாக இருக்கிறது. அலுவலக  நண்பர்கள் சிலருக்கு மட்டும் நான் பிளாக் எழுதுவது (!!)  தெரியும். அவர்களில் ஒருவர் மேற்சொன்ன பதிவைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னார், "இந்த மாதிரி விஷயங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாது சரவணா, செஞ்சு முடிச்சிட்டு சொல்லணும். அப்போ சொல்லும்போது இருக்கிற பெருமை வேற. இது ஏதோ வாய்ச்சவடால் விடுற மாதிரி இருக்கு" என்று. நான் அதற்கு அவரிடம், "இது உங்கள் மனநிலை. என்னைப் பொறுத்தவரையில் சொல்லிவிட்டு செய்யும்போது ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் கூட படித்தவர்களையும் பின்னூட்டம் அளித்தவர்களையும் மனதில் நினைத்துக்கொண்டு உத்வேகத்துடன்  ஓடுவதற்குத் தயாராகிவிடுவேன்" என்றேன். நாம் நினைத்த காரியம் நடக்காமல் போய்விட்டால் நல்லவேளையாக இதை  பொதுவெளியில் சொல்லவில்லை என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம் என்பது அவரது எண்ணம். இருக்கட்டும்.

ஒரு சுபயோக சுபதினம். நண்பர் தனது அக்காவை அழைத்துவந்தார். "இவதான் ருக்மிணி, இந்த வீட்டோட ஓனர்" என்றார். நான் அன்றைக்குத்தான் அவரை நேரில் பார்க்கிறேன். அதற்கு முன்னர் ஓரிரு முறை போனில் மட்டுமே பேசியிருக்கிறேன். "சட்டிஸ்கர்ல இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆயிடுத்து, இங்கதான் இருக்கலாம்னு இருக்கேன். எனக்கு வீடு வேணுமே" என்றார். நண்பரும் வழிமொழிந்துவிட்டு "ஒரு மூணு மாசம் போதுமா? இல்ல, இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கிடுதீங்களா?" என்றார். மனதுக்குள் சின்ன அதிர்ச்சி. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. "மூணு மாசம் கூட  தேவைப்படாது, இங்க நிறைய வீடு காலி இருக்கு, கூடிய சீக்கிரமே காலி பண்ணிடறேன்" என்றேன்.

பிரபாவின் முகத்தைப் பார்க்கும் தைரியம் எனக்கில்லை. இருந்தாலும் அதிர்ச்சியை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவேண்டுமே. பார்த்தேன். கலவரமடைந்திருந்தாள் என்பது தெரிந்தது. வந்தவர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும். "தப்பா நினைச்சிக்கிடாதீங்க, வேற  வழியில்ல" என்றார் நண்பர். "இதில என்ன இருக்கு, உங்க வீடு. உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்க கேக்கறீங்க, எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றேன்.

இங்கே ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆகவேண்டும். உங்களில் எத்தனை பேருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இருக்கிறது. ஊரில் ஒரு ஜோதிடர் இருக்கிறார். சௌந்தர்ராஜன் என்று பெயர். பிரசித்தி பெற்றவர். ஜாதகத்தைக் கையில் கொடுத்தவுடன் ஜாதகருடன் பிறந்தவர்கள் இத்தனை பேர், அம்மாவுடன் பிறந்தவர்கள் இத்தனைபேர், அப்பாவுடன் பிறந்தவர்கள் இத்தனை பேர், இவர்களில் இத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைக் கூறிவிட்டு அடுத்த வருடத்துக்குள் நடக்கப்போகும் விஷயங்களை பட் பட்டென்று மண் குடத்தை உடைத்தாற்போல் சொல்வார். நல்லது கெட்டது என்றெல்லாம் பார்க்கமாட்டார். அவரிடம் அம்மா ஜனவரி மாதத்தில் என்னுடைய ஜாதகத்தைக் காட்டியிருக்கிறார். அன்றைக்கு அந்த ஜோதிடர் ஹைலைட்டாக "வீடு மாறணும், இப்ப இருக்கிற வேலை போகும்" என்று புதிதாக ஒரு குடத்தை உடைத்திருக்கிறார். எனக்கு என்ன பயமென்றால் அவர் சொன்னபடி வீடு மாறவேண்டிய சூழல் வந்துவிட்டது. இரண்டாவதாக சொன்னதும் நடந்துவிடுமோ? சொல்லப்போனால் அலுவலக நிலையும் அப்படித்தான் இருக்கிறது. மனைவி, குழந்தைகள், பெற்றோர், சுற்றி வாங்கியிருக்கும் கடன் ஆகியவற்றை நினைத்துத்தான் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிறேன்.

வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டுப் போன  அடுத்த நாளிலிருந்தே வீடு வேட்டை தொடங்கிவிட்டது. ஏழு வீடுகள் மாறிய அனுபவம் இருந்ததால் நல்லது கெட்டதுகளை விரைவாக இனம்காண முடிந்தது. இந்த நல்லது கெட்டதுகளில் புதிதாக இன்னொன்றையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். பெருமழை பெய்தால் வெள்ளநீர் வீடு புகுமா எனும் ஆராய்ச்சியும். வீடு இருக்கும் பகுதி மேடாக இருக்கவேண்டும், நமக்கு வீட்டைக் காண்பிப்பவரிடம் தண்ணி வந்ததா என்று கேட்டு விசாரித்துக்கொள்ளவேண்டும். வந்தது என்றால் பிரச்சனையில்லை, வீடு வேண்டாமென்று விட்டுவிடலாம். வரவில்லை என்றால் தான் பிரச்சனை. வீடு காட்டுபவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், நாம் தான் நமக்கிருக்கும் எக்ஸ்ட்ரா அறிவைப் பயன்படுத்தி வெள்ளம் வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று அனுமானிக்கவேண்டும்.

பல இடங்களில் தேடினோம். பார்த்தவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறை. நமக்கு அவசரம் இல்லையென்பதால் இன்னும் நிதானமாகத் தேடினோம். அப்போதுதான் ஜீவா தான் வசிக்கும் பிளாட்டுக்கு அடுத்த பிளாட் காலியாக இருப்பதாக பிரபாவிடம் கூறியிருக்கிறார். இங்கே ஜீவா யாரென்று சொல்வதற்கு ஒரு சின்ன பிளாஷ்பேக். முகநூலில் பகிர்ந்ததை இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.


//வீட்டுக்கு கெஸ்ட் வருகிறார்கள். கெஸ்ட் என்றால் மிக முக்கியமான கெஸ்ட். பாப்பாவுடன் யு.கே.ஜி. படிக்கும் பாப்பா தன் அப்பா அம்மாவுடன் வருகிறாள், அதுவும் முதல் முறையாக. எனக்கு காலையில் பிள்ளைகளை விட்டுச்செல்லும் வேலை மட்டும் தான் என்பதால் மனைவிக்கு மட்டும் அவர்கள் அனைவரையும் பரிச்சயம். வீட்டில் தின்பண்டங்கள் ஏதும் இல்லை. மாலை ஆறு மணிக்கு அவர்கள் வருவதாகச் சொல்லியிருந்ததால் ஐந்தரை மணிவாக்கில் ஏதாவது வாங்கிவரலாம் என்று புறப்பட்டுச் சென்றேன்.

அது ஒரு நல்ல பேக்கரி. நிறைய ஸ்வீட் கார வகைகள் உண்டு. அடிக்கடி சென்றுவருவதால் கடைக்காரரும் நல்ல பரிச்சயம். நான் சென்றபோது ஒரு தம்பதி இது வாங்கலாமா அது வாங்கலாமா என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். கடைசியில் ஹனி கேக்கும் சமோசாவும் வாங்குவதென்று இருவரும் ஒருமனதாகத் தீர்மானித்து வாங்கினர். அவர்கள் சென்றதும் கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தபடியே ஹனி கேக்கும் சமோசாவும் கொடுக்கச்சொன்னேன். வருபவர்களுக்கு கொறிப்பதற்கு இதுவே நல்லதாக இருக்கும் என்று பட்டது.


வீட்டுக்கு வந்ததும் அவர்கள் வந்துவிட்டிருந்தார்கள் என்பது வாசலில் இருந்த செருப்புகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது. உள்ளே சென்றேன். பேக்கரியில் பார்த்த அதே தம்பதி, அதே பேக்கரியின் கவருடன் அமர்ந்திருந்தார்கள்...//

ஜீவா ஜோஷியின் அம்மா. ஜோஷியும் பாப்பாவும் ஒன்றாகப் படிக்கிறார்கள். பிரபாவும் ஜீவாவும் தினமும் சந்தித்துக்கொள்வார்கள். ஜீவாவின் கணவர் ஹெல்மெட் கடை வைத்திருக்கிறார். அவர்களுக்கு மூன்று வயதில் இன்னொரு பெண் குழந்தையும் உண்டு என்பது கூடுதல் தகவல். அவர்களது பிளாட்டுக்கு அருகிலேயே என்றால் பிரபாவுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும், பள்ளிக்கும் அருகில் வந்துவிடும், வீடு மட்டும் நம் வசதிக்கு ஏற்ப அமையவேண்டும். வீட்டையும் பார்த்தோம், எங்களுக்குத் தேவையான அளவுக்கு இருந்தது. கூடவே பட்ஜெட்டும். ஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் வீடு மாறிவிட்டோம். பெண்டு கழன்றுவிட்டது. நல்லவேளையாக அம்மா இருந்ததால் நிறைய வேலைகள் அவரே பார்த்துவிட்டார்.அடுத்த நாள். ஏதேனும் சாமான்கள் விட்டுப்போயிருக்கின்றனவா என்று சோதித்துவிட்டு நண்பரிடம் சாவியைக் கொடுத்துவிடலமென்று நானும் மனைவியும் பாப்பாவுடன் புறப்பட்டோம். மேலே புகைப்படத்தில் எனக்குப் பின்னால் ஒரு பெருமாள் படம் இருக்கிறதே தெரிகிறதா? அது வானமாமலை பெருமாள் படம். நண்பர் நான்குநேரிக்காரர். வானமாமலை பெருமாளின் பக்தர். நாங்கள் வருவதற்கு முன்னரே இந்தப் படத்தை ஒட்டி வைத்திருந்தார். நாங்களும் அப்படியே இருக்கட்டுமென்று விட்டுவிட்டோம். பூஜை செய்யும்போதெல்லாம் கற்பூர ஆரத்தி காட்டுவது வழக்கம். பாப்பாவும் தனது மழலைக்குரலில் "பெருமாளே, காப்பாத்துப்பா" என்பாள். வீட்டில் சில குப்பைப் பொருட்கள் மட்டுமே இருந்தன. அவற்றையெல்லாம் சுத்தம் செய்து வெளியே வீசிவிட்டு கதவைப் பூட்டுவதற்காக வந்தோம்.பாப்பா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, பெருமாளிடம் சென்றாள். "பெருமாளே, மறுபடியும் நாங்க உன் கிட்டயே வந்திரணும்" என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.