அன்புள்ள சீனு,

நமது முதல் சந்திப்பைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் மகனை அழைத்து வந்ததற்கான காரணம் ஒன்றைச் சொன்னேன், நினைவிருக்கிறதா? அந்தக் காரணத்தை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அந்தக் காரணம் கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது, இல்லை?

அமெரிக்கா சென்றதும் கொம்பு முளைச்சிருச்சா என்றெல்லாம் நினைக்கவில்லை. நீங்கள் இந்தியாவில் இருக்கும்போது எந்த அளவுக்கு தொலைபேசி அழைப்புக்கு மறுமொழி செய்வீர்கள் என்பதை நான் அறிவேன். அது தவிர, நான் ஏற்கனவே சொன்னபடி ஷிப்டில் வேலைக்குச் செல்பவர்களை நான் எப்போதும் தொந்தரவு செய்யமாட்டேன். அப்பா மில்லில் வேலை பார்த்தவர். டே ஷிப்ட், ஆப் நைட், புல் நைட் என்று மூன்று விதமான ஷிப்டுகள். ஒவ்வொரு வாரமும் மாறி மாறி வரும். நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வந்து பகலில் உறங்குவார். பார்க்கையில் பாவமாக இருக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்திருந்தேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. என்னுடைய எண் அவருக்குத் தெரியும். நான் பொதுவாக ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை என்றால், மீண்டும் அழைக்கமாட்டேன். அவருக்குத் தெரிந்திருக்கும், அவர் மீண்டும் அழைக்கட்டும் என்று விட்டுவிடுவேன். ஆனால், அந்த நண்பர் என்னை அழைக்காதது மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. என்னை யாராவது அழைத்து, எடுக்க முடியாமல் போனால் நான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை அழைத்துவிடுவேன். ஆனால், இந்த விஷயம் மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கே தெரியும், நான் யாரையும் விஷயம் எதுவும் இல்லாமல் அழைக்கமாட்டேன். அந்த நண்பர் ஒரு அருமையான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அது குறித்து தனிப்பட்ட முறையில் பாராட்டவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அழைத்திருந்தேன். பரவாயில்லை.

இதேபோல், மனைவியின் தோழி ஒருவர் இருக்கிறார். எப்போது அழைத்தாலும் எடுக்கமாட்டார். புத்தகம் ஒன்றைக் கொடுக்க வேண்டியிருந்தது. சில நாட்களுக்கு முன் அழைத்திருந்தோம், அவர் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தோம், அப்போதும் எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பினோம், அதற்கும் பதில் இல்லை. சரி, அவர் வேறு ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்று விட்டுவிட்டோம். மீண்டும் ஒரு வாரம் கழித்து அழைத்தோம். அப்போதும் எடுக்கவில்லை. மீண்டும் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று இடைவெளி விட்டு அழைத்தோம். பதில் இல்லை. அதன்பிறகு, ஒரு பத்து நாட்கள் கழித்து அழைத்தார். இத்தனை நாட்கள் அழைத்தும் பதில் அளிக்காதது ஏன் என்று சற்றுக் காரமாகவே கேட்டுவிட்டார் மனைவி. மனைவியின் இயல்பு உங்களுக்கே தெரியும், அவர் எத்தனை மென்மையாகப் பேசுவார் என்று. அவரையே கோபப்பட வைத்திருக்கிறது இந்த பதிலில்லா அழைப்புகள். புத்தகத்தைக் கொடுத்தபிறகு நாங்கள் அந்தத் தோழியை அழைப்பதே இல்லை. ஏதேனும் வேண்டுமென்றால், அவரே அழைப்பார். அவ்வளவுதான்.

நாள் ஒன்றின் பெரும்பாலான நேரத்தை, அலுவல் பணிகளில் செலவிடுகிறீர்கள் என்பது வருத்தம்தான். ஆனால், சனி, ஞாயிறுகளில் வேலை இருக்காது, அல்லவா? சரி, அந்த நேரத்தையாவது மனைவிக்காகவும் நண்பர்களுக்காகவும் செலவிடவும். டிரம்பின் புதிய கொள்கையால் உங்களுக்கும், அங்கு வசிக்கும் சக நண்பர்களுக்கும் பணி விஷயத்தில் சற்று சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியா? இது தவிர, இப்போது ஐ.டி. துறையில் பலர் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்களாமே? இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நேரமிருப்பின் விளக்கவும்.

கடந்த வாரம், நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். உங்களது வலைப்பதிவின் இணைப்பின் மூலமாகத்தான் வந்திருந்தார். என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு, சிலவற்றைப் பாராட்டினார். ‘பாஸ், அந்த கேரக்டரை சரியா வார்த்தையால விளக்குறீங்க. உங்க எழுத்தைப் படிக்கப் படிக்க, அந்தக் கேரக்டர் கூடவே பயணிக்கிற மாதிரியே இருக்கு’ என்றிருந்தார். எனக்கு சற்றுக் கூச்சமாக இருந்தது. ஆனாலும், இது போன்ற பாராட்டுகள்தானே நம்மை மேலும் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருக்கும்? இந்தப் பதிவை அவர் படித்தால், இதையெல்லாம் ஏன் இவன் பதிவில் எழுதுகிறான் என்று எண்ணக்கூடும். பரவாயில்லை.

முகநூலில் ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ என்றொரு போட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது, நாம் நம் மனம் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமாம். யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம், எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இருநூறு வார்த்தைகளில் எழுதச் சொல்லியிருக்கிறார்கள். நானும் கலந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதுவரை வெளிக்கொணராத, வேறு ஒரு நபருக்கு கடிதம் எழுதலாம் என்றிருக்கிறேன். வலைப்பதிவுகள் வெகு ஜோராகப் போய்க்கொண்டிருந்த சமயம், நீங்கள் ஒரு கடிதப்போட்டி நடத்தினீர்கள், அல்லவா? அப்போதுதான், எனக்கு பதிவர்கள் பலரையும் அறிமுகம் கிடைத்தது. முந்திரிக்கொட்டை போல கடிதம் எழுதியவர்களுக்கெல்லாம் பாராட்டியும், குறை கூறியும் பின்னூட்டம் இட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

நாம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவோம். நிறைய பேசுவோம்.


பேசுவோம்.