சென்னையின் சீஷோஷ்ண நிலை அவ்வளவு சரியில்லை. பகலில் வெயிலுடன் குளிர் காற்றும் சேர்ந்து அடிக்கிறது. இரவில் பனி கொட்டுகிறது. உலர்பனி. ஈரப்பதம் என்பது கொஞ்சம் கூட இல்லை. வண்டியில் பயணிக்கும்போது நேரடியாக நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. நம் அனுமதியின்றி மூக்கினுள் நுழைந்து நுரையீரலை சேதப்படுத்துகிறது.

எனக்கு தொண்டை நன்றாகக் கட்டிக்கொண்டுவிட்டது. குரல் பாதி மொட்டை ராஜேந்திரன் போலவும், பாதி விடிவி கணேஷ் போலவும் மாறிவிட்டது. நேற்றிலிருந்து சரியில்லை. மிளகும் மஞ்சளும் கலந்த பால் குடித்தும், சுடுதண்ணீரில் உப்பு போட்டுக் கொப்பளித்தும், கொதிக்கும் தண்ணீரை அப்படியே தொண்டை கொதிக்கும் அளவுக்குக் குடித்தும் பார்த்தாயிற்று. சரியாவதாகத் தெரியவில்லை. வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை. வந்தாலும் கீய்ச், கீய்ச் என்று பாதி வார்த்தைகளும் கரகரவென்று பாதி வார்த்தைகளும் தடுமாறுகின்றன.

யாரிடமும் போனில் பேச முடியவில்லை. பேசினாலும் நான் பேசுவது அவ்வளவாகப் புரியவில்லை. நண்பர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. விவரம் கேட்பதற்குக் கூட முடியவில்லை. பிறகு பேசுகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்.

இன்று காலையில் லேசான காய்ச்சல். குளித்துவிட்டு வந்ததிலிருந்து எதுவும் செய்ய முடியவில்லை. படுத்துவிட்டேன். மனைவி வந்து தோட்டுப் பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குப் போகும்படி அறிவுறுத்தினார். வண்டி ஓட்ட முடியாது என்று மறுத்துவிட்டேன். மனதுக்குள் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நம்மை யாரேனும் அழைத்துப் போக மாட்டார்களா என்று தோன்றியது.

நான்கு தெரு தள்ளி இருக்கும் நண்பர் ஒருவரை மனைவி தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த நண்பர் உடனே கிளம்பி வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு பாதிக் காய்ச்சல் விலகிவிட்டதாகத் தோன்றியது. அவருடன் அவருடைய இரு சக்கர வாகனத்தில் சென்று மருத்துவரைப் பார்த்தேன். வழக்கம்போல் ஸ்டெத்தஸ்கோப் வைத்து மூச்சை இழுத்துவிடச் சொன்னார். நாக்கை நீட்டச் சொன்னார். கண்ணைப் பார்த்தார். காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்தார். நான்கைந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

எனக்கு கைவைத்தியம் என்றைக்குமே பலன் தந்ததில்லை. மருத்துவரிடம் சென்று அவருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு, அவர் தரும் மாத்திரைகளை விழுங்கினால்தான் உடல்நிலை தேறும். அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததுமே பாதி தேறியது போலத்தான் தெரிந்தது. உடன் வந்த நண்பரே வீட்டில் விட்டுவிட்டார். தலையில் தட்டாத குறையாக சில அறிவுரைகளை வழங்கினார். வழக்கம்போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டேன். மாத்திரைகளை விழுங்கிவிட்டு உறங்கி எழுந்ததும் சற்று ஆசுவாசமாக இருக்கிறது. காய்ச்சல், தலைவலி எதுவும் இல்லை. ஆனால், தொண்டை இன்னும் சரியாகவில்லை. விடிவி கணேஷும், மொட்டை ராஜேந்திரனும் இன்னும் தொண்டையில் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

வெளியே வந்து பார்த்தேன். பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்கள் தம்பதி சமேதராக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘ஆபீசா?’ என்றேன். ‘இல்லை, கடைக்கு’ என்றார் கணவர். கடந்த வாரம் நாங்கள் பாண்டிச்சேரி சென்றிருந்ததை மனதில் வைத்துக்கொண்டு,  ‘நியூ இயர் எங்க?’ என்றார். ‘எங்கேயும் இல்லை, வீட்டில்தான்’ என்றேன். அவர் என்ன புரிந்திருந்தார் என்று புரியவில்லை. ‘நானும் வீட்டில்தான்’ என்று சொன்னார். அதிலும் ‘வீட்டில்தான்’ என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னார். அவர் சொன்னதற்கான அர்த்தம் எனக்குப் புரிந்திருந்தது.