செல்வி

========

மனைவிக்கு ஒரு கெட்ட(!?) பழக்கம். எங்காவது புதிய இடங்களுக்குச் சென்றாலோ, விருந்து, விழாக்களுக்குச் சென்றாலோ அங்கிருப்பவர்கள் சிலரை நட்பாக்கிக்கொள்வார். அவர் ஆக்கிக்கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். ஓரிடத்திற்குத் தனியாகச் செல்லும் அவர், அங்கிருந்து திரும்ப வரும்போது தோழியர் புடைசூழ வருவார். அது மட்டுமல்ல, அந்த நட்பு நீண்ட நாள் நீடித்திருக்கும் என்பது வரலாறு.

சான்றிதழ் வாங்குவதற்காக இந்தி பிரச்சார சபைக்குச் சென்றவர், தான் படிக்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுடன் பழகி, வாட்ஸப் குழு உருவாக்கிக்கொண்டு படிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதும், அவ்வப்போது அரட்டை அடித்துக்கொள்வதும் உண்டு. திருமண விழாக்களுக்குச் சென்றால் கேட்கவே வேண்டாம்.

எங்காவது புதிய இடத்திற்குச் சென்று வந்திருந்தால் நான் கேலியாகக் கேட்பேன், “எத்தனை பேருக்கு நம்பர் கொடுத்தே? எத்தனை பேர் கிட்ட நம்பர் வாங்கினே?” என்று. அவரும் வழிந்துகொண்டே எத்தனை என்பதைக் கூறிவிடுவார். ஆனாலும், ஆள் உஷார்தான். உண்மையான நட்புடன், அன்புடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் கில்லாடி. அப்படியும் ஏமாற்றும் எண்ணத்துடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுவிட்டால் போதும், “இப்போ என்ன ஆச்சு? காசு பணமா போச்சு? அன்புதானே? திரும்பக் கிடைக்கும்” என்று சொல்வார்.

சரி. இதற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆண்களில் சரவணன், செந்தில் என்பதைப் போல் பெண்களில் செல்வி, பிரியா என்ற பெயர்கள் மிகவும் அதிக அளவில் இருக்கும். என் மனைவியின் ஃபோனில் கூட Selvi Akka, Selvi FB, Selvi (Pavithra Amma), Selvi Velachery என்று பல பெயர்களில் செல்வி என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். மேற்கூறியவை எனக்கு நினைவில் இருப்பவை மட்டுமே. இன்னும் எத்தனை செல்விகள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வீட்டிற்கு அருகே “Drunken Monkey” என்ற கடை ஒன்றைத் திறந்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கு இரண்டு நாட்களுக்கு முன் மனைவியும், தங்கை மகளும் சென்றிருக்கிறார்கள். அங்கு மில்க் ஷேக் குடித்துவிட்டு வந்தவர்கள், அங்கிருந்த கடைப் பெண் ஒருவரிடம் நட்பாகியிருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படங்களை அந்தப் பெண் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். மனைவி என்னிடம் அவற்றைக் காட்டினார். அப்போதுதான் அவருடைய பெயர் செல்வி என்பதைக் கவனித்தேன். அந்த செல்வியின் பெயரை இப்படித்தான் தன் ஃபோனில் சேமித்து வைத்திருக்கிறார். “Selvi Drunken Monkey.”